புதுடெல்லி: ‘‘லாபம் சம்பாதிக்கும் வியாபாரம் அல்ல கல்வி, அதன் கட்டணங்கள் மக்கள் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் கல்விக் கட்ட ணத்தை, ஆந்திர பிரதேச அரசு ஆண்டுக்கு 24 லட்சமாக கடந்த 2017-ம் ஆண்டு உயர்த்தியது. இது முந்தைய கல்விக் கட்டணத்தை விட 7 மடங்கு அதிகம். இதற்கு எதிராக ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆந்திர அரசின் உத்தரவை செல்லாது என அறிவித்து, கூடுதல் கல்விக் கட்டணத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
2017-2020-ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் கட்டணத்தை ஆந்திர பிரதேச அரசு உயர்த்தி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் செல்லாது என கூறி, கூடுதல் கல்விக் கட்டணத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏற்கெனவே இருந்த கல்விக் கட்டணத்தை விட 7 மடங்கு உயர்த்தி ஆண்டுக்கு ரூ.24 லட்சமாக உயர்த்தியது நியாயம் அல்ல. லாபம் சம்பாதிக்கும் வியாபாரம் அல்ல கல்வி. கல்விக் கட்டணம் எப்போதும் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மருத்துக் கல்லூரிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.