இந்திய, இலங்கை மீனவர்கள் இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, இரு நாட்டு மீனவர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடந்தது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் டெல்லியில் 5-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்தியா (தமிழகம்) மற்றும் இலங் கையைச் சேர்ந்த மீனவர்கள் இடையே கடலில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய, இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகங்களும் ஏற்பாடு செய்தன. அதன்படி சென்னை யில் கடந்த 2014-ம் ஆண்டு இந்திய, இலங்கை மீனவ பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இதன்தொடர்ச்சியாக, இரு நாட்டு மீனவர்கள் பங்கேற்ற பேச்சு வார்த்தை டெல்லியில் நேற்று நடந்தது. டெல்லி ஜவஹர் பவனில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் 13 பேரும், இலங்கை சார்பில் 10 மீனவ பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு சார்பில் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மீன்வளத்துறை இயக்குநர் உள்ளிட் டோரும் இலங்கை அதிகாரிகளும் பங்கேற்றனர். காலை 11 மணி அளவில் தொடங்கிய கூட்டம், மாலை 5 மணி வரை நீடித்தது. எல்லை தாண்டி மீன் பிடிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள், மீன்பிடி படகுகளை உபயோகிக்கும் முறை, கச்சத்தீவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும் போது, ‘‘இந்திய, இலங்கை மீனவர்கள் இடையே நிலவும் பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் மற்றும் அந்நாட்டு கடற்படை தாக்கக் கூடாது என்று வலியுறுத்தப் பட்டது. கூட்டம் சுமுகமான முறையில் நடந்தது. இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பாக நவம்பர் 5-ம் தேதி நடக்கவுள்ள இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும்’’ என்றார்.
தமிழகம், புதுச்சேரி சார்பில் பங்கேற்ற தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ கூறும்போது, ‘‘எல்லை தாண்டியதாகக் கூறி தமிழக மீனவர்களை தாக்கக் கூடாது. மீன்பிடி தடைக் காலம் இல்லாத காலங்களில் தலா 83 நாட்கள் என்ற அடிப்படையில் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் இழுவை வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொள்ள வேண்டும். கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என வலியுறுத்தினோம்’’ என்றார்.
இலங்கை மீனவர்கள் பிரதிநிதி களின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி யன் கூறும்போது, ‘‘இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பது, இழுவை வலைகளை பயன்படுத்துவது போன்ற செயல்களால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, எல்லை தாண்டி மீன் பிடிப்பதை அனுமதிக்க மாட்டோம். எல்லை தாண்டி மீன் பிடித்தால் கைது நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள். இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய பகுதிகளில் மீன் பிடித்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றார்.
மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோச னைக் கூட்டம் டெல்லியில் வரும் 5-ம் தேதி நடக்கவுள்ளது.