அத்வானியுடன் பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

அத்வானியின் 95-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் வாழ்த்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அத்வானியின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியில் நீண்ட காலம் தலைவராக இருந்தவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று (செவ்வாய்க்கிழமை) தனது 95வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மூத்த தலைவரின் வீட்டிற்கே நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதே போல பாஜகவின் பல்வேறு தலைவர்கள் அத்வானிக்கு சமூக வலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து வந்தபின்னர் அது குறித்த படங்களை பகிர்ந்துள்ள பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அத்வானி ஜியின் பிறந்த நாளில் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தேன். இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவருடைய தொலைநோக்கு பார்வை, அறிவுத்திறனுக்காக நாடுமுழுவதும் அவர் மதிக்கப்படுகிறார். பாஜகவை கட்டியெழுப்பி வலுப்படுத்தியதில் அவரின் பங்களிப்பு மகத்தானது. அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பதிவில், "தேசம் மற்றும் கட்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட உங்களது வாழ்க்கை எங்களுக்கு ஓர் உத்வேகம்" என்று தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்தில், "அத்வானி அவர்கள் தனது ஓய்வில்லாத முயற்சியால் நாடுமுழுவதும் கட்சியை பெரும் அமைப்பாக பலப்படுத்துவதற்கு பாடுபட்டார். அரசாங்கத்தில் பங்கேற்றிருக்கும் போது நாட்டின் வளர்ச்சிக்காக அளவிடமுடியாத பங்காற்றியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2011ம் ஆண்டு கருப்பு பணத்திற்கு எதிரக அத்வானி நடத்திய ஜன் சேதன் யாத்திரையின் தாக்கத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்த 1927 ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின், தற்போது பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் கராச்சியில் அத்வானி பிறந்தார். இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், பின்னர் ஜன சங்கத்திற்காக வேலை செய்தார். கடந்த 1980 ஆம் ஆண்டு பாஜகவை உருவக்கிய தலைவர்களில் அத்வானியும் ஒருவர். அதனைத் தொடர்ந்து வாஜ்பாயுடன் இணைந்து பாஜகவின் முகமாக நீண்டகாலம் அறியப்பட்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1990ல் அத்வானி நடத்திய "ரத யாத்திரை" தேசிய அரசியலில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT