இமாச்சலப்பிரதேச காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர் 
இந்தியா

இமாச்சலப்பிரதேசம் | தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர்

செய்திப்பிரிவு

சிம்லா: இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் பலர், திங்கள் கிழமை கட்சியில் இருந்து விலகி, மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் வரும் 12ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளுங்கட்சியான பாஜகவும் எதிர்கட்சியான காங்கிரஸூம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் திங்கள்கிழமை 26 காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தரம்பால் தாக்கூர், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சாயினி, முன்னாள் கவுன்சிலர் ராஜன் தாக்கூர், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் அமித் மேத்தா உள்ளிட்ட 26 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

புதிகாக இணைந்தவர்களை வரவேற்கும் விதமாக மாநில முதல்வர் தனது ட்விட்டரில், " காலம் மாறிக்கொண்டே இருக்கிறுது. இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் இன்று அக்கட்சியி்ல் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர். பாஜக குடும்பத்தில் இணைந்துள்ள அவர்களை மனமார வரவேற்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக பாடுபடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்திருக்கின்றன.

SCROLL FOR NEXT