கறுப்புப் பண ஒழிப்பு திட்டம் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகளைப் பிரதமரின் பிரத்யேக செயலியில் தெரிவிக்கலாம். சிறந்த கருத்து, ஆலோசனை கூறுபவர்களை பிரதமர் நேரில் சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.narendramodi.in/downloadapp) என்எம் செயலி (NM App) குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:
பிரதமரின் NM App செயலியில் நெட்வொர்க்ஸ் என்னும் சுட்டி இடம்பெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து, கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.
பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்
இந்த கணக்குக்கென்று பிரத்யேக பெயர், கடவுச்சொல் உருவாக்க வேண்டும். இந்த செயலியில் நுழைந்ததும், தேசத்தின் வளர்ச்சி குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். பிரதமரின் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி தொடர்பான கருத்துகளையும் தெரிவிக்கலாம்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், கருத்துகளையும் தெரிவிக்கலாம். சிறந்த கருத்து, ஆலோசனை கூறுபவர்களைப் பிரதமர் நேரில் சந்திப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.