இந்தியா

ஒரே பதவி ஒரே ஓய்வூதிய விவகாரம்: 2 மாதத்தில் தீர்வு காண்பதாக பாரிக்கர் உறுதி

பிடிஐ

‘‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தில் உள்ள முரண்பாடுகள், குறைகள், 2 மாதத்தில் சரி செய்யப்படும்’’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறுதி அளித்தார்.

கடந்த 1947-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் விமான நிலையத்தை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் படையினர் முயற்சித்தனர். அப்போது தீரமுடன் போரிட்டு அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டினர். அப்போது வீரமரணம் அடைந்த வீரர்கள் மற்றும் சுதந்திர இந்தியாவில் முதல் பரம்வீர் சக்கரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, காஷ்மீரின் பத்காம் பகுதியில் நடந்தது.

மறைந்த வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் மற்றும் உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாரிக்கர் கூறியதாவது:

ராணுவத்தில் பணியாற்றுவோருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் அடங்குவர். அவர்களில் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் மட்டும்தான், ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறவில்லை. ஓய்வூதிய கணக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த குறைபாடு 2 மாதத்தில் சரி செய்யப்படும்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் கடந்த 43 ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருந்தது. பாஜக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அதன்படி இத்திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி இருக்கிறார். இதன்மூலம் 24 சதவீதம் அளவுக்கு ஓய்வூதியம் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் பாரிக்கர் கூறினார்.

SCROLL FOR NEXT