‘‘அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.வை தோற்கடிக்க, தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட தயார்’’ என்று மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ள யோசனைக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சிமி தீவிரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை போலீஸார் கைது செய்தனர். பதான்கோட்டில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான செய்திகளை தவறாக ஒளிபரப்பிய என்டிடிவி.க்கு ஒரு நாள் தடையை மத்திய அரசு விதித்தது.
‘‘இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நாட்டில் அவசர நிலை (எமர்ஜென்சி) காலத்தை நினைவூட்டுகின்றன’’ என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக.வை தோற்கடிக்க வேண்டும். அதற்கு எல்லா அரசியல் கட்சியினரும் ஒரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். அதற்காக தேசிய அளவில் கூட்டணி உருவாக்க வேண்டும். பாஜக.வை தோற்கடிக்க தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட நான் தயார். நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பாஜக.வை எதிர்த்து போராடுவோம் என்று மம்தா பானர்ஜி திட்டவட்டமாகக் கூறினர்.
மம்தாவின் இந்த யோசனைக்கு, காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும் ஆதரவு தெரி வித்துள்ளனர். ராகுல் காந்தியை கைது செய்ததற்கு மம்தா கடும் எதிர்ப்பு தெரவித்ததன் மூலம் காங் கிரஸ் கட்சியுடன் மீண்டும் அவர் நெருங்கி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘பாஜக.வுக்கு எதிராக நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். திரிணமூல் காங்கிரஸின் திட்டத்தில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது’’ என்றார்.
ஐக்கிய ஜனதா தள தலைமை பொதுச் செயலாளரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான கே.சி.தியாகி கூறும்போது, ‘‘மம்தா தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி அமைந்தால், அதில் இடம்பெறுவதில் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு மகிழ்ச்சிதான். மதச் சார்பற்ற கட்சிகளும், ஒரே கருத்து உடையவர்களும் ஓரணியில் திரள வேண்டும். அப்போது பாஜக.வையும் அதன் மதவாத அரசிய லையும் எதிர்த்து போராட முடியும். பாஜக., ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் மதவாத கொள்கைகள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன’’ என்றார்.
இதேபோல் மம்தாவின் யோசனையை சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் வர வேற்றுள்ளனர். எனவே, பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்தது போல், அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக.வுக்கு எதிராக மெகா கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.