இந்தியா

ஏப்ரல் 1-ல் வாசகர்களை முட்டாள்களாக்க குஜராத் நாளிதழ் வெளியிட்ட செய்தி உண்மையானது

பிடிஐ

குஜராத்தை சேர்ந்த அகிலா மாலை நாளிதழ் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக இன்று முதல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பொய்யான செய்தியை பிரசுரித்தது. அதற்கு மறுநாள், நேற்றைய நாளிதழில் வெளியான குறிப்பிட்ட செய்தி பொய்யானது என்ற விளக்கமும் அளிக்கப்பட்டது. தற்போது அந்த செய்தி உண்மையாகி இருப்பதால் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து அந்நாளிதழின் ஆசிரியர் கிரீத் கணாத்ரா கூறும்போது, ‘‘வாசகர்களை ஏமாற்றும் நோக்கில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என செய்தி பிரசுரித்தோம். 6 மாதங்களுக்குப் பின் தற்செயலாக இந்த செய்தி உண்மையாகிவிட்டது’’ என்றார்.

அதே சமயம் அரசின் திட்டத்தை இந்த நாளிதழ் 6 மாதங்களுக்கு முன்பாக எப்படி கசியவிட்டது என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 10-ம் தேதி அந்த நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘முட்டாள்கள் தினத்தில் மக்களை ஏமாற்றும் நோக்கில் தான் அந்த செய்தி வெளியிடப்பட்டது. அரசு உயரதிகாரிகள் கசியவிட்ட தகவலை தாங்கி அந்த செய்தி வெளியாகவில்லை’’ என தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT