சாதாரண மக்கள் பாதிப்பை சுட்டிக்காட்டி ரூபாய் நோட்டு நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி கடுமையாக விளாசி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசைப் பாரட்டி கவனம் ஈர்த்திருக்கிறார் உத்தரப் பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவர் ஹரிகேஷ் பகதூர்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளைத் தடை செய்தது சரியே. இதன்மூலம் நிதி ஒழுங்கு மேம்படுத்தப்பட்டு, இந்திய பொருளாதாரம் சீரடையும். இதன் மூலம் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து, அதன் உருவாக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.
இந்தத் திட்டத்தின் மூலம் சில நாட்களுக்கு ஏற்படும் சின்னஞ்சிறு சிரமங்களை, நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்களின் வளத்துக்காகவும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
அதேநேரத்தில் அரசு, பொதுமக்கள் சந்திக்கிற பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து, குழப்பங்களைத் தீர்க்க வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் மக்களவை எம்.பி.யான பகதூர், 1977 மற்றும் 1980-ல் இரு முறை கோரக்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சில மாதங்களில் உத்தரப் பிரதேச தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிகேஷ் பகதூரின் அறிக்கை வெளிவந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.