இந்தியா

மக்களவையில் ராகுல் தூங்கினாரா?: சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு

செய்திப்பிரிவு

மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருப்பது போன்ற வீடியோ காட்சி பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை திட்டவட்டமாக மறுத்துள் ளது. விலைவாசி உயர்வு விஷயத் தில் காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளில் செய்ததைத்தான் ராகுல் காந்தி இப்போது செய்துள்ளார் என்று பாஜக விமர்சித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மக்களவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ராகுல் காந்தி கண்களை மூடி, வலது பக்கமாக தலையை சாய்த்துள்ளார். லோக் சபா டி.வி.யில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவு சமூகவலை தளங்களில் பலரால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, அந்த வீடியோ உண்மையல்ல. ஆட்சி பொறுப்பை ஏற்றது முதலே மத்திய அரசு சிறுபிள்ளைத் தனமான பழி வாங்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளது. அதில் இதுவும் ஒன்று என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக விலைவாசி பிரச்சினையில் காங்கிரஸ் தூங்கிக் கொண்டிருந்தது. இப்போது மக்களவையில் விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து விவாதத்தின் போது காங்கிரஸின் யுவராஜா (ராகுல் காந்தி) தூங்கி விட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா இது தொடர்பாக கூறும்போது, இது சர்ச்சைக்குரிய விஷயமல்ல. உறுப்பினர்கள் பலரும் தூங்குவது, கொட்டாவி விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நான் பார்த்து இருக்கி றேன். நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடைபெறும்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தனது கண்களை மூடிக் கொண்டு அதனை கவனிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். அதற்காக அவர் தூங்கிவிட்டார் என்று கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT