சச்சின் பைலட் 
இந்தியா

அசோக் கெலாட்டை பிரதமர் பாராட்டியது சாதாரணமானதல்ல - காங்கிரஸ் மேலிடத்துக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது கொல்லப்பட்ட பழங்குடி சமூகத்தினர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள 'மன்காட் தாம்' என்ற நினைவிடத்தை நேற்று முன்தினம் தேசிய சின்னமாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இதற்காக பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், காங்கிரஸ் மூத்த தலைவரும், முதல்வருமான அசோக் கெலாட்டும் பங்கேற்றார். விழாவில் மோடி பேசும் போது, "அசோக் கெலாட்டும், நானும் ஒரே காலத்தில் முதல்வர்களாக பணியாற்றி இருக்கிறோம். இந்தியாவில் உள்ள முதல்வர்களிலேயே மிகவும் மூத்த முதல்வர் என்ற பெருமை அவருக்கு உள்ளது" என்றார்.

விழாவில் அசோக் கெலாட் பேசும்போது, "பிரதமர் மோடி எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் அவருக்கு மிகச்சிறந்த வரவேற்பும், கவுரவமும் அளிக்கப்படுகிறது. ஜனநாயகம் மிகவும் ஆழமாக வேரூன்றிய காந்தி பிறந்த நாட்டின் பிரதமர் வந்துள்ளார் என்பதற்காக இப்படிப்பட்ட வரவேற்பை வெளிநாட்டு மக்கள் அவருக்கு அளிக்கின்றனர். இதை அவர்கள் பெருமையாக உணர்கின்றனர்” என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் நேற்று கூறியதாவது: மன்காட் தாமில் நேற்று, முதல்வர் அசோக் கெலாட்டை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியதை நாம் பார்த்தோம். இதே போன்று, மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தையும் பிரதமர் மோடி புகழ்ந்து பேசியதையும் நாம் பார்த்தோம்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். நேற்று நடந்தது சுவாரஸ்யமான சம்பவம். இதனை காங்கிரஸ் கட்சி மேலிடம் சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது.

கட்சி விதிகளுக்கு மாறாக நடந்து கொண்ட ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது. கடந்த செப்டம்பர் 25-ம் தேதி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் அதில் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் புதிய தலைவர் கார்கே விரைவில் ஒழுங்கு நடவடிக்கையை எடுப்பார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT