மகாராஷ்டிரா வியாபாரி கொண்டு வந்த ரூ.4 கோடி மதிப்புள்ள பழைய 1,000 ரூபாய் நோட்டு களை மத்தியப் பிரதேசத்தில் போலீஸார் பறிமுதல் செய் தனர்.
புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள நேபாநகர் தொகுதிக்கு வரும் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கும் நடவடிக்கையாக மாவட்ட எல்லைகளில் போலீஸார் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி நேற்று முன் தினம் இரவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வாகனத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்த மகாராஷ்டிரா மாநில வியாபாரி ஷீபர் உசேன் என்பவரையும் கைது செய்தனர்.
நாடு முழுவதும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் ரூ.4 கோடி மதிப்புள்ள பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது மத்தியப் பிரதேச போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவை கணக்கில் வராத கறுப்புப் பணமாக இருக்கக் கூடும் என்பதால் வருமான வரித் துறையினருக்கும் போலீஸார் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புர்ஹான்பூர் மாவட்ட எஸ்பி அனில் சிங் குஷ்வாஹா கூறும்போது, ‘‘செல்லாது என அறிவிக்கப்பட்ட இந்த நோட்டுகளை இங்குள்ள அறக்கட்டளைக்கு நன்கொடை யாக கொடுத்து, அந்த பணத்தை மகாராஷ்டிரா வியாபாரி வெள்ளைப் பணமாக மாற்ற முயற்சித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.