நீதித்துறை மீதான ஊழல் புகார் களை விசாரிக்க தேசிய நீதி ஆணையம் அமைப்பதுதான் ஒரே வழி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
ஒய்வு பெற்ற நீதிபதி மார்கண் டேய கட்ஜு எழுப்பியுள்ள புகார் குறித்து தி இந்துவிடம் ராஜா கூறியதாவது: ’நீதித் துறை மீதும் ஊழல் புகார்கள் எழுந்து வருகின்றன. இதற்காக தேசிய நீதி ஆணையம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்த வேண்டி உள்ளது. நம்மிடம் கொலிஜியம் எனப்படும் முறை இருந்தும் நீதிபதிகள் நியமிக்கப்படுவதும் பதவி உயர்வு பெறுவதும் நமக்குத் தெரிவ தில்லை. இதனால்தான் அதன் மீது கேள்விகள் எழுகின்றன.
நீதிபதி கட்ஜுவின் புகாருக்கு அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி பதில் அளிக்க வேண்டும். இந்த ஊழல் கட்ஜுவுக்கு எப்போது தெரியவந்தது? இதை அவர் தாமதமாகக் கூறுவதன் உள்நோக்கம் என்ன என்பதற்கும் அவரே பதில் அளிக்க வேண்டும் கட்ஜு இவ்வளவு பெரிய புகாரை பத்திரிகையாளர் கூட்டம் நடத்தி சொல்லத் தவறியது ஏன்?” என்று டி.ராஜா கேள்வி எழுப்பினார்.