இந்தியா

நிதிப் பற்றாக்குறையால் ரயில்வே துறையில் அமல்படுத்தப்படாத பாதுகாப்பு பரிந்துரைகள்

ஆர்.ஷபிமுன்னா

கான்பூர் ரயில் விபத்தில் பலியான உயிர்கள் 148 என உயர்ந்துள்ளது. இந்நிலையில், நிதிப் பற்றாக்குறையின் காரணமாக பல பாதுகாப்பு பரிந்துரைகள் ரயில்வே அமைச்சகத்தால் அமல்படுத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 16, 2011-ல் டாக்டர்.அனில் காகோட்கர் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அதிக அளவு பாதுகாப்பு மற்றும் மறுஆய்வு குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைகள் பிப்ரவரி 17, 2012-ல் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், ‘தடம் புரள்வதே, ரயில் விபத்துக்களின் 50 சதவிகித காரணம். இதற்கு மனிதர்கள் செய்யும் தவறுகளும் காரணம்.’ எனக் கூறி இருந்தது.

இத்துடன் பாதுகாப்பு விஷயத்தில் ரயில்துறையின் அவலநிலையை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது. இதன் பிறகு வந்த பிரதமர் நரேந்தர மோடி அளித்த யோசனையின் பேரில் செப்டம்பர் 2014-ல் பொருளாதார நிபுணரான பிபேக் டிப்ராய் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ரயில்வெ பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைப்பது உட்படப் பல்வேறு புதிய யோசனைகளை அளித்த இக்குழு, ரயில் பாதுகாப்பு விஷயத்தில் அனில் காகோட்கர் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

அனில் காகோட்கர் பரிந்துரையின் நிலை குறித்து கடந்த ஜூலை மாதம் மக்களவையில் கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சர் ராஜன் கொஹைன், காகோட்கர் குழு அளித்த 106 பரிந்துரைகளில், 68-ஐ அரசு ஏற்றதாகக் கூறி இருந்தார். இத்துடன் 19-ஐ பகுதி அளவிலும் மற்றும் 19 பரிந்துரைகளை ஏற்க மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவற்றில், 22 பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு விட்டதாகவும், 20 இறுதி நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், மீதம் உள்ள பரிந்துரைகள் ஏற்கப்படாதமைக்கு காரணம் நிதிப் பற்றாக்குறை தான் என்பது தெரிய வந்துள்ளது. இதேபோல், சிஏஜி எனப்படும் தலைமை கணக்கு அலுவலர் அறிக்கைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரயில் துறை திட்டமிடுதல் மற்றும் கட்டமைப்புகளில் குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்துள்ளது.

கடந்த 2015-ல் சமர்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கையில், ’ரயில் பாதைகளின் மராமத்து பணி மற்றும் ரயில் பாலங்களுக்காக முறையான நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. இது மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இருக்காது. சோதனைக்குட்பட்ட 102 பாலங்களில் 31 பழுதடைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதன் மராமத்து பணிக்கு உத்தரவிட சுமார் 43 மாதங்கள் தாமதாமாகி உள்ளது.’ எனப் புகார் கூறி இருந்தது.

இது குறித்து மத்திய ரயில்வேதுறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘காகோட்கர் குழுவின் முழு பரிந்துரைகளை செயல்படுத்த ரயில்துறைக்கு ஐந்து வருட காலத்திற்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இதற்காக மத்திய ரயில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ரூ,1,19,183 கேட்டு எழுதியிருந்தார். இது கிடைக்காத காரணத்தால் அதன் சிறிய பகுதி மட்டும் செயலுக்கு எடுக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்சனைகளை சிஏஜி அறிக்கைகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்த பிறகும் நிதிப் பற்றாக்குறையால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை.’ எனத் தெரிவித்தனர்.

தற்போது, இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் ஏற்பட்ட அதிகமான உயிர் இழப்பால், வரவிருக்கும் 2016-17 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரயில்வேதுறைக்கு சற்று கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட், வரும் நிதி ஆண்டு முதல் மற்ற துறைகளை போல், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்படும் என மத்திய அரசு முடிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT