மோர்பி: குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த இடத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். அங்கு நடந்த மீட்பு பணிகள் குறித்து நேற்று முன்தினம் இரவு நடந்த உயர்நிலை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேற்று நேரில் பார்வையிட்டார். அவருக்கு விபத்து சம்பவம் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
பிறகு, மோர்பி மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற பிரதமர், பாலம் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தொடங்கு பாலத்தை, புதுப்பிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் பாலம் மூடப்பட்டது. 8 மாதங்கள் முதல் 12 மாதங்கள் இந்த பாலத்தை மூட முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், புதுப்பிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, திட்டமிட்ட காலத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பாகவே, இப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. திறக்கப்பட்ட 4-வது நாளில் தொங்குபாலம் அறுந்து மச்சு ஆற்றில் விழுந்துள்ளது. இதில் சிக்கி குழந்தைகள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர்.
பாலத்தில் புதுப்பிப்பு பணிகளை மேற்கொண்ட ஒரேவா குழுமம், பாலத்துக்கான தகுதிச் சான்றிதழை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறவில்லை என மோர்பி நகராட்சி தலைவர் சந்திப்சிங் ஜலா கூறியுள்ளார். திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே பாலத்தை திறந்தது பொறுப்பற்ற செயல் என வழக்கு பதிவில் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தொங்கு பாலத்தில் 400-க்கும் மேற்பட்டோருக்கு டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ன. இதனால் பாலத்தில் கூட்டம் அதிகரித்து பழைய இரும்பு கேபிள்கள் அறுந்துள்ளன என குஜராத் தடயவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. 7 மாத காலமாக நடந்த பராமரிப்பு பணியில் தொங்கு பாலத்தின் பழைய சில கேபிள்கள் மாற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக, ஒரேவா நிறுவன மேலாளர்கள், டிக்கெட் வசூலிப்பவர்கள், பழுது பார்க்கும் ஒப்பந்தக்காரர்கள், பாதுகாவலர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.