அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெறுவது தொடர்பாக, சீனாவுடன் இந்தியா 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச அளவில் அணு சக்தியை விநியோகிக்கும் நாடுகள் குழு (என்எஸ்ஜி) செயல்படுகிறது. இக்குழுவில் 48 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்குள் அணுசக்திகளைப் பரிமாற்றம் கொள்கின்றன.
இக்குழுவில் புதிதாக ஒரு நாட்டை சேர்க்க வேண்டுமானால் 48 நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட, குழுவில் இடம்பெற முடியாது.
இந்தச் சூழலில் என்எஸ்ஜியில் இடம்பெற இந்திய முறைப்படி விண்ணப்பித்தது. சியோலில் நடந்த என்எஸ்ஜி குழுக் கூட்டத் தில் இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்ட பின்னர் இந்தியாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) இந்தியா கையெழுத்திடவில்லை. அதை காரணம் காட்டி சீனா உட்பட சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதன்பின், எதிர்ப்பு தெரிவித்து நாட்டுத் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் மோடி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பலனாக என்எஸ்ஜி.யில் இந்தியாவை சேர்க்க பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால், சீனா மட்டும் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.
அதனால் என்எஸ்ஜி.யில் இடம்பெற சீனாவின் ஆதரவைப் பெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக சீன அரசுடன் ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், 2-வது கட்டமாக சீனாவுடன் இந்தியா நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் ஆயுதங்கள் ஒழிப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு துறை செயலாளர் அமன்தீப் சிங்கும் சீனா சார்பில் ஆயுதங்கள் கட்டுப்பாட்டுத் துறை டைரக்டர் ஜெனரல் வாங் குன்னும் பங்கேற்றனர்.
‘‘இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாகவும், பயன்தரக் கூடிய தாகவும் இருந்தது. என்எஸ்ஜி.யில் இந்தியாவைச் சேர்ப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களின் வழிகாட்டுதல்படி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்’’ என்று டெல்லியில் அதிகாரிகள் தெரி வித்தனர்.
எனினும், வாங் குன் கூறும்போது, ‘‘என்எஸ்ஜி.யில் உறுப்பினராக வேண்டுமானால், அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அப்படி இல்லாமல் சலுகை வழங்கி என்எஸ்ஜி.யில் ஒரு நாட்டை சேர்த்தால், சர்வதேச அளவில் அணுஆயுத ஒழிப்பு என்ற முயற்சி முற்றிலும் சிதைந்துவிடும்’’ என்றார்.