இந்தியா

நிகழ்ச்சி ஒளிபரப்பு தடை: உச்ச நீதிமன்றத்தில் என்டிடிவி மனு

பிடிஐ

நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து 'என்டிடிவி இந்தியா' செய்தி தொலைக்காட்சி சேனல், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு தொடர்பாக அச்செய்தி நிறுவனம் தரப்பில், "மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் வரும் 9-ம் தேதி இரவு 12.01 மணியில் இருந்து 10-ம் தேதி நள்ளிரவு 12.01 வரை 'என்டிடிவி இந்தியா' ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு விரோதமான உத்தரவு. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பிய போது, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ விவரங்களையும், ரகசியம் காக்கப்பட வேண்டிய முக்கிய தகவல்களையும் பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக் காட்டியதாக 'என்டிடிவி இந்தியா' சேனல் மீது குற்றம்சாட்டப்பட்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'என்டிடிவி இந்தியா' செய்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதித்திருப்பது பத்திரிகை சுதந்திரத்தையே நேரடியாக மீறுவதாகும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்திய செய்தி ஆசிரியர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT