கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கையை அறிவித்திருந்தாலும், அதிலும் ஏதாவது ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்து பதுக்கல் பணத்தை வெள்ளையாக்கும் வேலையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 9-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கு மறுநாளே இந்திய ரயில்வே துறையில் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டிகளில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு அளவு வழக்கத்தைவிட 1000% அதிமாகயிருந்தது.
ரயில்வே அமைச்சகம் திரட்டிய தகவல் அடிப்படையில், பிரதமர் மோடி கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை அறிவித்த செவ்வாய்க்கிழமையன்று ஏ.சி. முதல் வகுப்பில் 2000 டிக்கெட்டுகள் விற்றுள்ளன.
அடுத்த நாளான புதன்கிழமை ஏ.சி. முதல் வகுப்பில் பயணிக்க 27,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இது 1000% அதிகம். அதேபோல் புதன்கிழமையன்று இந்திய ரயில்வே சார்பில் 70,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. ஏ.சி. 3-ம் வகுப்பில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் முந்தைய நாளைவிட 16% அதிகம்.
இந்நிலையில் வழக்கத்துக்கு அதிகமான அளவில் டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்றதால் ரயில்வே நிர்வாகம் சில கெடுபிடிகளை அமல்படுத்தியது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் டிக்கெட் முன்பதிவு ஓரளவு குறைந்தது.
ரூ,50,000-க்கு மேல் டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டால் பான் கார்டு அவசியம் என்ற விதியை ரயில்வே அமல்படுத்தியது. இதனால், ஏ.சி. முதல் வகுப்பில் டிக்கெட் புக்கிங் ஓரளவு கட்டுப்பட்டது. இருப்பினும், வழக்கமான அளவை விட 800% அதிகமாக இருந்தது.
இதுதவிர சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டது. அவர்கள் டிக்கெட் கவுன்ட்டர்களில் நிற்பவர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களா என கண்காணித்தனர்.
மேலும் ரூ.10,000-க்கு அதிகமான தொகைக்கான டிக்கெட் கேன்சல் செய்யப்படும்போது பணம் வங்கிக் கணக்கு வாயிலாகவோ, செக் மூலமாகவோ மட்டுமே டிரான்ஸ்பர் செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இதற்கிடையில் பேருந்து, ரயில், விமான டிக்கெட் முன்பதிவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேவேளையில் சலுகை அளிக்கப்பட்டுள்ள துறைகள் அனைத்துமே அவர்கள் பெறும் ரூ.500, 1000 நோட்டுகள் தொடர்பாக முழு விவரங்களையும் திரட்டிக் கொள்ளுமாறு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.