ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த 16 முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியபோதிலும் அவர்கள் இதுவரை அரசு பங்களாவை காலி செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
ஜெய்பால் ரெட்டி, அஜித் சிங், கிருஷ்ணா தீரத், சச்சின் பைலட், எம்.எம்.பல்லம் ராஜு, கிரிஜா வியாஸ், பரூக் அப்துல்லா, வேணி பிரசாத் வர்மா, கபில் சிபல் உள்ளிட்ட 16 முன்னாள் அமைச்சர்களுக்கு அரசு பங்களாவை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இன்னமும் அவர்கள் காலி செய்யவில்லை. சட்ட விரோதமாக தங்கி உள்ள அவர்களுக்கு ரூ.21 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறிய அளவிலான அரசு பங்களாக்களில் 21 முன்னாள் அமைச்சர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ உறுப்பினர்களாக இருப்பதால், வேறு இடத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வீட்டில் குடியேறுவதற்கு 15 நாட் கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு நாயுடு தெரிவித்துள்ளார்.
இவர்களில் ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி, வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷ், ஜோதிராதித்ய சிந்தியா, கே.வி.தாமஸ், சசி தரூர், கே.சிரஞ்சீவி, இ.எம்.சுதர்சன நாச் சியப்பன் உள்ளிட்டோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.