இந்தியா

அதீத நம்பிக்கை கூடாது: பாஜகவுக்கு அத்வானி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தேர்தலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். அதீத நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அறிவுரை கூறியுள்ளார்.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் எல்.கே.அத்வானி பேசியதாவது: “கட்சியினரிடையே இப்போது காணப்படும் எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவை எடுப்பதில் முக்கிய பங்கு வகித்த ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களை பாராட்டுகிறேன்.

நரேந்திர மோடி இதுவரை 77 பிரமாண்ட பேரணிகளை நடத்தி யிருக்கிறார். விரைவில் 100-வது பேரணியை நடத்தி முடிப்பார். இதற்கு முன்பு இதுபோன்ற பிரமாண்ட பேரணிகளை நான் பார்த்தது இல்லை.

2004-ம் ஆண்டு தேர்தலை அதீத நம்பிக்கையுடன் எதிர்கொண்டதன் காரணமாக தோல்வியடைந்தோம். அதுபோன்ற தவறு இனி நிகழக்கூடாது. விரைவில் நடைபெறவுள்ள தேர்தலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். அதீத நம்பிக்கையுடன் செயல்படக்கூடாது.

குஜராத்தில் பல்வேறு சாதனை கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. குறிப் பாக நர்மதை நதியின் நீரை சபர்மதி ஆற்றுக்கு கொண்டு வந்த நடவடிக்கை மிகவும் பாராட்டத் தக்கது.

சமீபத்தில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் களில், மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் 80 சதவீத இடங்களில் பாஜக வெற்றி பெற்று சாதனை படைத்தது. காங்கிர ஸுக்கு மிசோரமில் மட்டுமே ஆறுதல் வெற்றி கிடைத்தது.

பாஜக குறித்து சிறுபான்மை யினர்களிடையே சந்தேகத்தை காங்கிரஸ் ஏற்படுத்தி வருகிறது. ஆனால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் அந்த சமூகத்தினர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித் துள்ளனர். நாங்கள் ஜாதி, இனம், மதம், மொழி அடிப்படையில் மனிதர்களிடையே வேறுபாடு காட்டமாட்டோம்” என்றார்.

இக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது: “தலைமை கணக்குத் தணிக்கையாளர், மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றின் நடவடிக்கை களுக்கு பயந்து அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இது தவறான தகவலாகும்.

பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அக் கட்சிக்கு இதுபோன்ற வழக்கங்கள் தொடர்பான ஞாபகம் எல்லாம் கடைசி நேரத்தில்தான் வரும் போல் இருக்கிறது. உண்மையில் தோல்வி பயம் காரணமாகவே, பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை” என்றார்.

முன்னதாக பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தீவிரவாதத்தை ஒடுக்கத் தவறியது, மந்தமான பொருளாதார வளர்ச்சி, வாக்கு வங்கி அரசியல் உள்ளிட்டவற்றுக்கு காங்கிரஸ் தலைமையும், பிரதமர் மன்மோகன் சிங்கும்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT