காலாவதியான 500, 1000 ரூபாய் தாள்களை வங்கிகளில் செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 30-க்குப் பிறகு நீட்டிக்கப்படாது என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வங்கிகளில் பழைய ரூபாய் தாள்களைச் செலுத்துவதற்கும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கும் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும் நிலையில், மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அருண் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், ‘ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகளில் போதிய அளவுக்கு பணம் உள்ளது. மக்களின் வசதிக்காக, 100 ரூபாய் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. கிராமப்புற வங்கிகளில் தேவைகளைப் பூர்த்தி செய்ய, 100 மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய கரன்சி தாள்களை விநியோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என, அமைச்சர் குறிப்பிட்டார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி நிலவரப்படி, 1,716.50 கோடி எண்ணிக்கையில் 500 ரூபாய் தாள்களும், 685.80 கோடி எண்ணிக்கையில் 1000 ரூபாய் தாள்களும் புழக்கத்தில் இருந்தன. இவை அனைத்தையும் புதிய தாள்களாக மாற்ற, டிசம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.
பழைய தாள்களை வங்கியில் செலுத்த, 30-ம் தேதிக்குப் பிறகு மேலும் அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கும்போது, ‘2016 டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு, கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ எனக் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், ‘கிளை அலுவலகங்கள் மற்றும் ஏடிஎம் மைங்களில் பாது காப்பு முன்னேற்பாடுகளை அவ் வப்போது மறுஆய்வு செய்து, பலப்படுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஏடிஎம் மையங் களிலும் சிசிடிவி கண்காணிப்பு நடவடிக்கையை உறுதி செய்வதோடு, அம்மையங்களில் பணியில் இருக்கும் பாதுகாப்புப் பணியாளர்கள், அசாதாரண சூழல்களை எதிர்கொண்டு சமாளிக்க உரிய முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளனரா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.