இந்தியா

குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து - ''விடுமுறையை கொண்டாடுவதற்காக வந்தனர்'' - 60 ஆக அதிகரித்த உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் மோர்பி நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலம், புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 26ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. குஜராத்தி புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்ட நிலையில், இன்று அது இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழும்போது அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்களில் சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர்.

இதில், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில பஞ்சாயத்து அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். இவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா உட்பட பல அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இதனிடையே, விபத்தை நேரில் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அது குறித்து பேசுகையில், "தீபாவளி விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைக் கருத்தில் கொண்டு ஏராளமானோர் புதிதாக திறக்கப்பட்ட இந்தப் பாலத்தை காண வந்தனர். இது சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடம். பாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். அது இடிந்து விழுந்தபோது, மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்" என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பூபேந்தர் படேலை தொடர்பு கொண்டு பேசி, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீயணைப்புத் துறை என அனைத்து துறையினரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், மீட்புப் பணிகளை துரிமாக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

பிரதமர் தன்னுடன் தொலைபேசியில் பேசியதை தெரிவித்த முதல்வர் பூபேந்திர படேல், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இது மிகவும் துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து தேவையான உத்தரவுகளை வழங்கி வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT