புதுடெல்லி: ட்விட்டர் சமூக வலைதளத்தை உலகப் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், அவருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “ட்விட்டர் இனி எதிர்க்கட்சிகளின் குரலை நெறிக்காது என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "வாழ்த்துகள் எலான் மஸ்க். இனி ட்விட்டர் வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். தகவல்களின் நம்பகத்தன்மையை அதிவேகமாக சோதனை செய்யும் என்று நம்புகிறேன். இனியாவது இந்திய எதிர்க்கட்சிகளின் குரல் அரசின் அழுத்தத்தின் பேரால் நெறிக்கப்படாது என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
கூடவே ட்விட்டரில் தனது பக்கம் எப்படியெல்லாம் தனக்கு எதிரான சதி நடக்கிறது என்பதை சுட்டிக்காட்ட ஒரு கிராஃபை பகிர்ந்துள்ளார். அந்த வரைபடத்தில் ஜனவரி 2021-ல் ராகுல் காந்திக்கான ஃபாலோயர்ஸ் 19 மில்லியன் என்றளவில் இருந்த நிலையில், ஆகஸ்ட் 2021ல் ஒரு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி பதிவு செய்த பின்னர் அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்டில் நடந்தது என்ன? - கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி ராகுல் காந்தி ஒரு படத்தைப் பகிர்ந்தார். அதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 9 வயது பட்டியலின சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறும் காட்சி இருந்தது. இந்தப் புகைப்படத்தை ட்விட்டர் ஆகஸ்ட் 9ஆம் தேதி நீக்கியது. தேசிய குழந்தைகள் நல ஆணையம் அளித்த புகாரின் பேரில் அந்தப் படம் நீக்கப்பட்டது. ராகுலின் ட்வீட்டில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் இடம்பெறாவிட்டாலும் கூட அவரின் பெற்றோர் அடையாளத்தை அம்பலப்படுத்தியதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், ட்விட்டருக்கு புகார் தெரிவித்தது. இதனையும் மறைமுகமாக குறிப்பிடும் வகையிலேயே ட்விட்டர் இதுவரை எதிர்க்கட்சிக்களின் குரலை நெறித்ததாகவும் இன்றைய வாழ்த்துச் செய்தியில் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.