சட்டீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையில் நடந்த மோதலில், 5 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் ஐஜி (பஸ்தார் மண்டலம்) எஸ்.ஆர்.பி.கால்லூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாராயண்பூர் மாவட்டத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் நக்ஸல்கள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அடர்ந்த தஸ்பால் வனப்பகுதி மற்றும் சோட்டேடாங்கர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட பெச்சா கிலாம் கிராமப் பகுதியில் நக்ஸல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு மாவட்ட ஆயுதப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இரு தரப்பு மோதலில் 5 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பகுதியில் நடந்த 2-வது மிகப்பெரிய என்கவுன்ட்டர் இது. கடந்த 16-ம் தேதி தண்டேவாடா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் உட்பட 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்களிடம் இருந்து ஆயுதங்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒட்டுமொத்தமாக பஸ்தார் பகுதியில் மட்டும் ஒரு மாதத்தில் 15 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஐஜி கூறினார்.