சண்டிகர்: டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கிறது. இக்கட்சி அரசு பணத்தை விளம்பரங்களுக்கு வாரி இறைத்து வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், பஞ்சாபிலும் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு விளம்பரங்களுக்கு அதிகம்செலவிட்டு வருவது தெரியவந்துள்ளது.
பேஸ்புக் விளம்பரங்களுக்கு மட்டும் பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசு ரூ.1.83 கோடி செலவிட்டுள்ளது. இதில் 77 சதவீத விளம்பரம் குஜராத்தை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 27 முதல் அக்டோபர் 24-ம் தேதி வரையில் பஞ்சாப் அரசின் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்பதை ‘ஓப் இந்தியா' இணையதளம் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளது. மொத்தமாக பஞ்சாப் அரசு அதன் பேஸ்புக் பக்கம் வழியாக 136 விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு செலவிட்ட தொகை ரூ.1.83 கோடி ஆகும்.
பஞ்சாபுக்கு 19.5%: இதில் 77.8 சதவீதம் குஜராத்மக்களை இலக்காகக் கொண்டு செலவிடப்பட்டுள்ளது. பஞ்சாப்மக்களை இலக்காகக் கொண்டு19.5 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்காக 1.2 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.
மொத்த விளம்பரங்களில் 66 விளம்பரங்கள் குஜராத்தையும், 41 விளம்பரங்கள் பஞ்சாபையும் இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தைஇலக்காகக் கொண்டு வெளியிடப்பட்ட விளம்பரங்கள் பஞ்சாபி மொழியில் இல்லாமல் இந்தியில் வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஓப் இந்தியா தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் செயல்பாட்டாளர் கன்னையா குமார், டெல்லி அரசு விளம்பரங்களுக்காக செலவிடும் தொகை குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்டுப் பெற்றார்.
டெல்லி ரூ.499 கோடி செலவு: அதன்படி, 2021-22 நிதி ஆண்டில் மட்டும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு விளம்பரங்களுக்காக ரூ.488.97 கோடி செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் 2015-ம் ஆண்டு டெல்லி முதல்வராக பொறுப்பேற்றார். அது முதலே விளம்பரங்களுக்கு டெல்லி அரசு செலவிடும் தொகை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஆம் ஆத்மி ஆட்சியில் விளம்பரங்களுக்கான செலவினம் 4,273% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.