புதுடெல்லி: "இந்த நூற்றாண்டின் மிகத்தந்திரமான நபருக்கு எதிராக, பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் முட்டாள்தனமான வாதத்தை முன்வைக்கின்றன" என்று கேஜ்ரிவாலின் முன்னாள் உதவியாரும், ஆம் ஆத்மி நிறுவனர்களில் ஒருவருமான குமார் விஷ்வாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி நிறுவனர்களில் ஒருவரும், அரவிந்த் கேஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளருமான குமார் விஷ்வாஸ், கேஜ்ரிவாலின் ரூபாய் நோட்டுகளில் கடவுளர் படம் குறித்த கருத்தை விமர்சித்து தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் கருத்து தெரிவித்துள்ள அவர், " சிறுபான்மையினர் வாக்குகளுக்கு அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் ஆகியோர் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். அதனால் 82 சதவீதம் உள்ள இந்துக்களின் வாக்கு வங்கியில் பாதியை கைப்பற்ற முடிந்தால் போதும், மோடி மீது உள்ள வெறுப்பினால் மீதமுள்ள சிறுபான்மையினர் வாக்குகள் தனக்கு தானாக கிடைத்துவிடும் என்பது அவருக்கு தெரியும். பத்திரிகையாளர்களும், மோடியை எதிர்ப்பிற்காக மட்டுமே அவரை கொண்டாடி வருகின்றனர். அவருக்கு, தந்தை, மனைவி, குழந்தைகள், குரு, நண்பர்கள், கொள்கை எதை குறித்தும் அக்கறை கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் கடவுளர்களின் கருத்தை ஆம் ஆத்மியின் முன்னாள் பிரமுகரான அஷ்வதோசும் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், "விநாயகர் லக்ஷ்மி பட விவகாரம், ஆம் ஆத்மி கட்சி தனது டெல்லி மாடலில் நம்பிக்கை இழந்து விட்டதை காட்டுகிறது. கல்வி, சுகாதாரம் போன்றவை தங்களுக்கு இனி வாக்குகளைப் பெற்று தரும் என்ற நம்பிக்கையை அக்கட்சி இழந்துவிட்டது. என்ன ஒரு துரதிர்ஷ்டம்" என்று தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த விவகாரம் குறித்த தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் வீழ்ச்சியடையும் ரூபாய் மதிப்பு, இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அரவிந்த் கேஜ்ரிவால் சிறந்த வழியைக் கண்டுபிடித்துள்ளார். இந்துத்துவ அரசியலில் பாஜகவை விஞ்சும் புதிய முயற்சி இது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கத்தில் கடவுளர் லக்ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப் போவதாக தெரிவித்திருந்தார்.அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.