இந்தியா

500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து வாக்கெடுப்பு நடத்தும் விதியின் கீழ் விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் அமளி: நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைப்பு

பிடிஐ

நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று அறிவிக் கப்பட்டது குறித்து, வாக்கெடுப்பு விதியின் கீழ் விவாதம் நடத்த கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கூடியது. மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவையில் அஞ்சலி செலுத் திய பிறகு முதல் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலை யில் மக்களவை நேற்று காலை கூடியது. அப்போது, ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வர திரிணமூல் காங்கிரஸ் விரும்புவ தாக அக்கட்சியின் எம்.பி. சுதீப் பண்டோபாத்யாயா கூறினார்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, ‘‘நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சியும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர விரும்பு கிறது. மேலும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அரசு வெளியிடுவதற்கு முன்பே அந்தத் தகவல் எப்படி வெளியில் கசிந்தது. இதுகுறித்தும் விவாதம் நடத்த வேண்டும்’’ என்றார்.

கார்கே மேலும் கூறும்போது, ‘‘ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது குறித்து 56-வது விதியின் கீழ் விவாதம் நடத்த வேண்டும். இதில் எல்லா கட்சியினரும் பங்கேற்பார்கள். இந்த விதியின் கீழ் எல்லா அரசியல் கட்சி உறுப்பினர்களும் வாக்களிக் கும் போது, அவர்களின் நிலைப் பாடு தெரிய வரும்’’ என்றார்.

இதற்குப் பதில் அளித்து நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் குமார் பேசும் போது, ‘‘எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் விவாதம் நடத்த தயார் என்று பிரதமர் மோடி உறுதி அளித் துள்ளார். அதன்படி, இந்தப் பிரச்சினை குறித்து 193-வது விதி யின் கீழ் (வாக்கெடுப்பு இல்லாமல்) விவாதம் நடத்த அரசு தயார். ஏனெனில் உயர் மதிப்புள்ள நோட்டுகளை மதிப்பிழக்க செய்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் இரண்டு கருத்துகள் எழுவதை அரசு விரும்பவில்லை’’ என்றார்.

இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதே பிரச்சினையை கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உட்பட எதிர்க்கட்சியினர் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. காலை 11 மணியில் இருந்து 12 மணி வரை கேள்வி நேரத்தின் போது அவை யில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சல் எழுப்பினர். அவையின் மைய பகுதிக்குச் சென்று எதிர்க்கட்சி யினர் அமளியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்துக்குப் பின்னர் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறும்போது, ‘‘ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியினர் கொடுத்த (பாஜக கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கொடுத்த நோட்டீஸ் உட்பட) நோட்டீஸ்களை அனு மதிக்க முடியாது. அவையில் இது குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், இதுபோல் கூச்சல் போட்டுக் கொண்டு அல்ல. எப்படி விவாதம் நடத்துவது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்’’ என்றார்.

பின்னர் அவையை 25 நிமிடங் கள் ஒத்திவைத்தார். அதன் பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையும் முடங்கியது

ரூபாய் நோட்டு விவகாரத்தால் மாநிலங்களவை நேற்று முற்றிலுமாக முடங்கியது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை நோட்டீஸ் அளித்திருந்தன.

காலை 11 மணிக்கு மாநிலங் களவை தொடங்கியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் கூடி கோஷ மிட்டனர். அதேநேரம் அதிமுக உறுப்பினர்கள், காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக் கோரி குரல் எழுப்பினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியபோது, காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்தனர். தற்போது அரசின் தவறான கொள்கையால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு அமைச்சர் வெங்கய்ய நாயுடு கடும் கண்டனம் தெரி வித்தார். குலாம் நபி ஆசாத் நாட்டை அவமானப்படுத்தியுள் ளார். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இத னிடையே எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அனைவரும் அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் அவை துணைத் தலைவர் பி.கே.குரியன் அவையை ஒத்திவைத்தார்.

அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்த முடியாததால் அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகலில் அவை மீண்டும் கூடியதும், ரூபாய் நோட்டு ரத்து உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒரேகுரலில் வலியுறுத்தின. இதனால் பிற்பகல் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT