இந்தியா

ரூபாய் நோட்டு வழக்குகளை இதர நீதிமன்றங்கள் விசாரிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் ரூ.500, 1000 நோட்டு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நோட்டு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் மக்களை துன்புறுத்தினால் நாட்டில் கலவரம் வெடிக்கலாம் என எச்சரித்திருந்தது.

மேலும், நோட்டு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை இன்று (நவ-25) ஒத்திவைத்தது.

அதன்படி இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் ரூ.500, 1000 நோட்டு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க முடியாது. நாடு முழுவதும் பல்வேறு கீழ் நீதிமன்றங்களிலும் பதிவாகியுள்ள வழக்குகள் நோட்டு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள வெவ்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி நீதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரிக்கும்போது மக்களுக்கு ஓரளவேனும் ஆறுதல் கிடைக்கும். பணத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள கூட்டுறவு வங்கிகளும் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்" என்றனர்.

'வெற்றி பெற்றது நோட்டு நடவடிக்கை'

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வாதிடும்போது, "கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதத்துக்கு ஆதரவாக நிதி திரட்டப்படுவதை தடுக்கவும் ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசின் நோட்டு நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது" என்றார்.

அதற்கு, "நோட்டு நடவடிக்கை வெற்றி பெற்றது என நீங்கள் உறுதியாகச் சொல்கிறீர்களா?" என தலைமை நீதிபதி வினவினார். அதற்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி, "நோட்டு நவடிக்கை வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை. இதுவரை வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி பணம் டெபாசிட் ஆகியுள்ளது. வங்கிகளில் பணம் குவிந்து வருவதால் இனி வருங்காலங்களில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வாய்ப்பிருக்கிறது.

வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் குவிந்திருந்த கூட்டம் இப்போது வெகுவாகக் குறைந்துள்ளது. இன்னும் 20 நாட்களில் இயல்பு நிலை திரும்பிவிடும்" என்றார்.

விவசாயிகளுக்கு என்ன செய்தீர்கள்?

ராபி பருவ பயிர்களை வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். அவர்களும் நிவாரணம் கிடைக்க என்ன செய்துள்ளீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மத்திய அரசு, "அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவை நிலைமையை கூர்ந்து கவனித்து வருகின்றன" என்றது.

நோட்டீஸ்:

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நோட்டு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அத்தனை மனு தாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அதில், நோட்டு நடவடிக்கை வழக்குகள் அத்தனையும் ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்துக்கோ அல்லது உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்றக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை சுட்டிக்காட்டி அது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு டிசம்பர் 2-ல் விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT