புதுடெல்லி: இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி, மறுபக்கம் கடவுளர் லக்ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எத்தனை நடவடிக்கைகள், முயற்சிகள் மேற்கொண்டாலும் இறையருள் இல்லாவிட்டால் அது பலன் தராது. எனவே பிரதமர் மோடிக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்ஷ்மி படங்களை அச்சிட்டால் நிச்சயமாக தேசம் வளர்ச்சி காணும். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு நான் ஓரிரு தினங்களில் கடிதம் எழுதுவேன்.
முஸ்லிம் தேசமான இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் விநாயகர் படம் இருக்கிறது. அவர்களால் முடியுமென்றால் ஏன் நம்மால் முடியாது. ஆகையால், இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி, மறுபக்கம் கடவுளர் லக்ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்கலாம். இந்தியா வளமான நாடாக இருக்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு இந்திய குடும்பமும் செழிப்பாக இருகக்வே விரும்புகிறோம். நாம் நிறைய பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும். நிறைய மருத்துவமனைகளை திறக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் கடந்த ஆண்டுகளைவிட தீபாவளிக்குப் பின்னர் காற்றின் தரம் ஒப்பீட்டு அளவில் மேம்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். "இது சிறு மகிழ்ச்சியே. டெல்லியில் சுத்தமான காற்று என்பதே நமது இலக்கு" என்றார். குஜராத் தேர்தல் பற்றி பேசிய அவர், "27 ஆண்டுகளாக பாஜக குஜராத்தில் ஆட்சியில் இருந்தும் ஏதேனும் ஒரு நல்ல செயலை செய்தததாக நிரூபிக்க முடியுமா" என்று வினவினார்.