எல்லையில் ராணுவ வீரர் உடல் சிதைக்கப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இந்திய ராணுவம்.
இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "பாகிஸ்தான் படையினர் செவ்வாய்க்கிழமை மச்சல் செக்டார் எல்லைப் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவத் தரப்பில் வலுவான பதிலடி அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் படையினர் நவுசேரா, பீமர் காலி பகுதிகளிலுள்ள இந்திய நிலைகளின் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறன்றனர்" என்றார்.
முன்னதாக, காஷ்மீரில் மச்சல் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பணியில் இருந்த 3 இந்திய வீரர்கள், பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவரின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் படையினரின் கோழைத்தனமான இந்தச் செயலுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை முதல் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
முதல் முறை அல்ல:
பாகிஸ்தான் படையால் இந்திய வீரரின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறை. கடந்த அக்டோபர் 29-ம் தேதியன்று இந்திய ராணுவ வீரரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.