இந்தியா

சிமி கைதிகள் என்கவுன்ட்டர்: நீதி விசாரணை கோரும் சமூக ஆர்வலர்கள்

மாரி ராமு

போபாலில் சிமி கைதிகள் 8 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இவர்கள், என்கவுன்ட்டர் வீடியோவைப் பார்க்கும்போது இது ‘போலி என்கவுன்ட்டர்’ என்பதாகவே தெரிகிறது என்று கூறியுள்ளனர்.

“32 அடி உயர சிறைத் தடுப்புச் சுவரை எந்த ஒரு காயமுமின்றி எப்படி இவர்கள் ஏறிக் கடந்தார்கள்? இவ்வளவு போலீஸார் இருந்தும் அவர்களை ஏன் உயிருடன் பிடிக்க முடியவில்லை?” என்று சூஃபி அகாடமியின் சையத் தாரிக் குவாத்ரி கேள்வி எழுப்பினார்.

நிச்சயம் சிறையிலிருந்து இவர்கள் தப்பியதாகக் கூறப்படுவது சிறை கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்க வேண்டும். ஏப்ரல் 2015-ல் தெலுங்கானாவில் கொல்லப்பட்ட விகாருதீன் என்பவர் உட்பட 5 பேரை என்கவுன்ட்டர் செய்ததன் தொடர்ச்சியே இந்த நடவடிக்கையும் என்றார் அவர்.

லம்பாதி ஹக்குலா போராட்ட சமிதியின் தலைவர் தாஸ்ராம் நாயக் கூறும்போது, உ.பி.தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை பிரிவினைபடுத்தும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியே சிமி கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதும், என்றார்.

பிரஜா கலா மண்டலி மாநில செயலர் ஜே.கோடி மவுலானா நசீருதீன் மற்றும் இந்திய மாணவர்கள் இஸ்லாமிய அமைப்பின் தெலுங்கான மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சையத் அசாருதீன் ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT