இந்தியா

ஃபிடலை விமர்சித்த ட்ரம்பேட்டாவை கலாய்த்த கேரள நெட்டிசன்கள்

பி.கே.அஜித்குமார்

மறைந்த கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்த டொனால்டு ட்ரம்பை கேரள மக்கள் சமூக வலைத்தளங்களில் அதனினும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த சனிக்கிழமை இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு உலக நாடுகள் பலவும் இரங்கல் தெரிவித்த நிலையில் ஃபிடல் ஒரு 'கொடூரமான சர்வாதிகாரி' என்று ட்ரம்ப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவல் பதிந்திருந்தார்.

ட்ரம்பின் இந்த பதிவுக்கு கேரளாவிலிருந்து பதிலடி பதிவு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியொரு எதிர்வினை நடக்கும் என ட்ரம்ப் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு கேரள மக்கள் அவரை கலாய்த்துள்ளனர்.

சர்ச்சைக்குள்ளான ட்ரம்பின் பதிவு:

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் அதில், "கியூபாவை ஆட்சி செய்த ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூரமான சர்வாதிகாரி. ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சி காலத்தில் கியூபாவில் கொள்ளை, வறுமை, மனித உரிமை மீறல்கள் போன்றவை நிகழ்ந்தன. இனி கியூப மக்கள் சுதந்திரமாக வாழலாம்" என்று கூறியிருந்தார்.

பலரும் ட்ரம்பை 'ட்ரம்ப்பேட்டன்' (மலையாளத்தில் சகோதரரே என்று அழைக்க பெயருடன் ஏட்டன் என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர்) என குறிப்பிட்டுள்ளனர்.

குவியும் கண்டனங்கள்:

ட்ரம்பின் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். ட்ரம்பின் பதிவுக்கு சுமார் 19,000 பேர் தங்களது கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

"யாராவது ட்ரம்பேட்டனை கேரளா வருமாறு அழைப்பு விடுங்கள், அப்போதுதான் கறுப்பு கொடியுடன் அவரை சிறப்பாக மக்கள் வரவேற்பார்கள். நீங்கள் ஃபிடலை பற்றிய கருத்திலிருந்து பின்வாங்கவில்லை என்றால் தொடர்ந்து உங்களை கிண்டல் செய்ய வேண்டியிருக்கும். நாங்கள் ஃபிடலுடன் உள்ளோம்" என்று பதிவிடப்பட்டிருந்தது.

ஃபிடல் காஸ்ட்ரோ மீது எப்போதுமே கேரள மக்களுக்கு நல்ல மரியாதை இருந்திருக்கிறது. இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநிலத்தில்தான் கம்யூனிஸ்ட் ஆட்சி அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கேரளாவை, சோமாலியாவுடன் ஒப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துகள் கேரளாவில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT