இந்தியா

தற்கொலையில் தமிழகம் முதலிடம்: கடந்த வருடம் தற்கொலை செய்தவர்களில் ஆண்களே அதிகம்

செய்திப்பிரிவு

கடந்த 2013-ம் ஆண்டு, இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாக தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டிற்கான தேசிய சுகாதார விவரத் தொகுப்பை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் வெளியிட்டார். அதில், 2005-ம் ஆண்டுமுதல் தற்கொலைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரமும் (16,112), 3-வது இடத்தில் மேற்கு வங்கமும் (14,957), 4-வது இடத்தில் ஆந்திரமும் (14,238), 5-வது இடத்தில் கர்நாடகமும் (12,753) உள்ளன.

ஆண்களே அதிகம்

கடந்த வருடம் தற்கொலை செய்தவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. தேசிய அள வில் ஆண்களின் தற்கொலை- பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் முறையே 76.1 மற்றும் 75.3 சதவிகிதம் என உள்ளது. இவர்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 19.6 சதவீதம். குடும்பத் தகராறு காரணமாக 24 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துள்ளனர். காதல் பிரச்சினைகளால் தற்கொலை செய்தவர்கள் 3.3 சதவீதம் பேர் ஆவர்.

தேசிய அளவில் தற்கொலை களால் மிகவும் பாதிக்கப்பட்ட வர்கள் 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் என்பது கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட மூன்று பேரில் ஒருவர் குறைந்த வயதுடைய வராக இருக்கின்றார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பு, ஒவ்வொரு வருடமும் புள்ளி விவரத்தை சேகரித்து வெளியிடுகிறது. இதற்கு உதவியாக, தேசிய குற்றவியல் பதிவு அமைப்பு வெளியிடும் புள்ளி விவரங்களையும் எடுத்துக் கொள்கிறது.

SCROLL FOR NEXT