லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 230 கி.மீ வேகத்தில் பறந்த பிஎம்டபிள்யூ கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் பலியாகினர். விபத்து சில நிமிடங்களுக்கு முன்னர் காரை ஓட்டியவரை அருகிலிருந்த நபர், ‘300 கி.மீ வேகத்தில் செல்... நாலு பேரும் செத்துப் போவோம்’ என்று விளையாட்டாகச் சொல்ல, அதுவே வினையாகிவிட்டது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடந்தது என்ன? - உத்தரப் பிரதேசத்தில் அண்மையில்தான் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திறக்கப்பட்டது. இந்தச் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிஎம்டபிள்யூ சொகுசுக் கார் ஒன்று சென்றது. அப்போது அதிலிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் காரை ஓட்டும் நபரிடம் இன்னும் வேகமாகச் செல்லவும் எனக் கூறுகிறார். அதற்கு அந்த ஓட்டுநர் ‘தோதான பாதை வரட்டும் 300-ல் செல்கிறேன்’ எனக் கூறுகிறார். அப்போது வீடியோ எடுக்கும் நபர் ஸ்பீடோமீட்டர் காட்ட அதில் 230 கி.மீ என்று வேகமுள் காட்டியது.
அப்போது அந்த நபர், ‘எல்லோரும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ளுங்கள். இன்னும் சற்று நேரத்தில் இன்னும் வேகமாகச் செல்வோம்’ என்று கூறிக்கொண்டே ஓட்டுநரிடம், ‘300 கி.மீ வேகத்தில் செல்... 4 பேரும் செத்துப் போகலாம்’ என்று கிண்டலாகச் சொல்கிறார். அந்த வீடியோ எடுத்தச் சில நிமிடஙகளில் கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. விபத்தில் உயிரிழந்த 4 பேரின் அடையாளமும் தெரிந்தது. அவர்களில் ஒருவர் மருத்துவர் ஆனந்த் பிரகாஷ் (35), பிஹாரைச் சேர்ந்தவர். அடுத்த நபர் அகிலேஷ் சிங், ரியல் எஸ்டே தொழிலதிபர், தீபக் குமார் பொறியாளர் மற்றும் முகேஷ் தொழிலதிபர். 4 பேரும் 35 வயதை நெருங்கியவர்கள். விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.
சைரஸ் மிஸ்திரி கார் விபத்து: கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்த தொழிலதிபர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் இறந்தார். அந்தக் காரில் முன் இருக்கையில், மும்பையைச் சேர்ந்த மருத்துவர் அனாஜிட்டா பண்டோலும் அவரது கணவர் டேரியஸ் பண்டோலும் அமர்ந்திருந்தனர். பின் இருக்கையில் சைரஸ் மிஸ்திரியும் டேரியஸ் பண்டோலின் சகோதரர் ஜெஹாங்கிர் பண்டோலும் அமர்ந்திருந்தனர். சூர்யா நதி மேம்பாலத்தில் விபத்து நடந்தது. பின் இருக்கையில் இருந்த சைரஸ் மிஸ்திரியும், ஜெஹாங்கிர் பண்டோலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அந்தக் காரும் அதிவேகத்தில் சென்றதுதான் விபத்திற்குக் காரணம் எனக் கூறப்பட்டடது.
சாலை விபத்தும் இந்தியாவும்: உலக நாடுகளில் உள்ள வாகனங்களின் மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதமே இந்தியாவில் உள்ளது. இருப்பினும் வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 20 முதல் 30 சதவீத வாகனங்கள் மட்டுமே முறையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) 2021 அறிக்கை வெளியானது. அதன்படி நாட்டில் 2021ல் நடந்த 4.22 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை மொத்த விபத்துகளில் 3,73,884 பேர் காயமடைந்தனர், 1,73,860 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் 24,711 பேர் இறந்தனர். தமிழகத்தில் 16,685 பேர் இறந்தனர். மகாராஷ்டிராவில் 16,446 பேர் இறந்தனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே முறையே 14.2%, 9.6% மற்றும் 9.5% சாலை விபத்து உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன. மொத்தமாக இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் 33.3 சதவீத இறப்பு பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.