புதுடெல்லி: ''திருமணமோ ஒரு முறை, ரகசிய வாழ்க்கையோ மூன்று பேருடன்'' என்று தனது வைரல் வீடியோவில் இந்துக்களை விமர்சித்ததாக ஒவைசி கட்சிப் பிரமுகர்ர் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சம்பல் நகரில் நேற்று நடந்த கூட்டத்தில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் உ.பி.தலைவர் சவுகத் அலி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது இந்த வீடியோ பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைரலான வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது: "பாஜக ஆட்சியை இழக்கத் தொடங்கும் போதெல்லாம், முஸ்லிம்களையே பின்தொடர்கிறார்கள். அவர்களைப் பற்றியே பேசுகிறார்கள். முஸ்லிம்களுக்கு அதிக குழந்தைகள் என்று கூறுகிறார்கள், சில சமயங்களில் இரண்டு முறை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றெல்லாம் முஸ்லிம்கள் பற்றி அவர்கள் பேசுகிறர்கள். ஆமாம், உண்மைதான். நாங்கள் அப்படித்தான் இரண்டு முறை திருமணம் செய்துகொள்கிறோம்,
ஆனால் அந்த இரண்டு மனைவிகளுக்கும் உரிய மரியாதை கொடுக்கிறோம், ஆனால் நீங்கள் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள். ஆனால் மூன்று பேருடன் ரகசியமாக வாழ்கிறீர்கள். அதனாலேயே நீங்கள் அவர்கள் யாருக்கும் மரியாதைகூட கொடுப்பதில்லை. நாங்கள் (முஸ்லிம்கள்) எங்களுடன் சேர்ந்து உங்கள் மக்களை உயர்த்தினோம். ஆனால் இப்போது நீங்கள் எங்களை அச்சுறுத்துகிறீர்கள்.
ஒரு சாது (இந்து துறவி) முஸ்லிம்களை கசாப்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நீங்கள் வெட்டுவதற்கு நாங்கள்என்ன கேரட்டா, முள்ளங்கியா அல்லது வெங்காயமா? சாது ஏன் இப்படி பேசுகிறார்? எங்களை மிரட்டிப் பார்க்கிறாரா? உங்களை எல்லாம் நாங்கள் 832 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளோம். அப்போதெல்லாம் பின்னால் கையை மடக்கி மரியாதை செய்த நீங்கள் இப்போது எங்களை மிரட்டிப் பார்க்கிறீரகள்'' என்று பேசியுள்ளார். இந்தப் பேச்சக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பலரும் தங்கள் கோபக்கணைகளை வீசியுள்ளதைத் தொடர்ந்து அவர் உடனே பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ''2 பெண்களை திருமணம் செய்தாலும் அனைவருக்கும் சம மரியாதை கொடுப்போம், ஆனால் வேறு சிலரோ ஒரு முறை திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு வெளியில் 3 மனைவிகள் உள்ளனர். அந்த மனைவிகளை சமூகத்தின் கண்களுக்கு தெரியாமல் மறைத்து விடுகிறார்கள், அப்படிப்பட்ட ஆண்களை பற்றித்தான் நான் பேசினேன், இந்து என்று எங்கேயும் குறிப்பிட்டு சொல்லவில்லை, என் எண்ணம். எந்த சமூகத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது என்பதுதான் " என்று சவுகத் அலி மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
வழக்குப் பதிவு: "ஏஐஎம்ஐஎம்மின் உ.பி.மாநிலத் தலைவர் சவுகத் அலி, ஒரு வைரல் வீடியோவில் இந்து சமூகத்திற்கு எதிரான அவமரியாதை, இழிவாக பேசியதாக, அவருக்கு எதிராக சம்பல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுகத் அலி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 295ஏ, மற்றும் 188 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது" என்று சம்பல் காவல்துறை கண்காணிப்பாளர் சக்ரேஷ் மிஸ்ரா ஏஎன்ஐயிடம் கூறினார்.