புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நாளை காலை 11 மணிக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
சிபிஐ சம்மன் வெளியானவுடனேயே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சவுரவ் பரத்வாஜ். அப்போது அவர் பேசுகையில், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. குஜராத் தேர்தலில் பாஜகவும், ஆம் ஆத்மியும் நேரடிப் போட்டியில் உள்ளதாலேயே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எங்களைப் பார்த்து பயம் வந்துள்ளது என்றார்.
இந்த சம்மன் தொடர்பாக மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், "சிபிஐ இதற்கு முன்னர் எனது வீட்டில் 14 முறை ரெய்டு நடத்தியுள்ளது. அதில் அவர்கள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. என் வங்கி லாக்கரை சோதனை செய்தனர். எதுவும் கிடைக்கவில்லை. எனது சொந்த கிராமத்தில் சோதனை செய்தனர். அங்கும் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது நாளை காலை 11 மணிக்கு சிபிஐ தலைமையகத்திற்கு வரச் சொல்லியுள்ளனர். நான் அங்கு சென்று முழு ஒத்துழைப்பு அளிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் பகத்சிங்குகளை அச்சுறுத்தாது: இந்த சம்மன் குறித்து ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், சிறைக் கம்பிகளும், தலைக்கு மேல் தொங்கும் தூக்குக் கயிறும் பகத் சிங்குகளின் உறுதியை ஒன்றும் செய்ய முடியாது. இது சுதந்திரத்திற்கான இரண்டாம் போர். மணிஷ் சிசோடியாவும், சத்யேந்திரா ஜெயினும் இன்றைய பகத் சிங்குகளாக உள்ளனர் என்றார். கடந்த மாதம் சிபிஐ, மணிஷ் சிசோடியாவின் நெருங்கிய வட்டத்தில் உள்ள விஜய் நாயரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.
இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது.