பஞ்சாப் மாநில சிறைச்சாலைக்குள் போலீஸ் உடையில் மர்ம நபர்கள் அதிரடியாக நுழைந்து, துப்பாக்கி யால் சுட்டும், குண்டுகளை வீசியும் திடீர் தாக்குதல் நடத்தி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் தீவிரவாத தலைவர் மின்டூ உட்பட 6 பேரை மீட்டுச் சென்றனர்.
தப்பியோடியவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு, ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் நாபா சிறைச்சாலை உள்ளது. நேற்று காலை 8.45 மணிக்கு இச்சிறைச்சாலையின் பிரதான நுழைவு வாயிலில் போலீஸ் உடையணிந்து 2 பேரும், சாதாரண உடையில் ஒருவரும் வந்துள்ளனர்.
சாதாரண உடையில் இருந்த வரின் கையில் விலங்கு மாட்டி யிருந்தது. போலீஸ் அதிகாரியைப் போல உடையணிந்த நபர், சிறைக் காவலர்களிடம் சென்று, கைதி ஒரு வரை உள்ளே அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சிறைக் காவலரும் ஆவணங்கள் எதுவும் கேட்காமல் உள்ளே அனுமதித்துள்ளார். சிறைச்சாலை வளாகத்துக்கு உள்ளே நுழைந்த பிறகு, பணியில் இருந்த 2 போலீ ஸாரிடம், கைதியை சிறையில் அடைப்பதற்கு சாவியைத் தாருங்கள் எனக் கேட்டுள்ளனர்.
சந்தேகமடைந்த போலீஸ், கூடுதல் விவரங்களைக் கேட்டதும், சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியை எடுத்து ஒரு போலீஸ்காரரின் வாயிலும், மற்றொரு போலீஸ்காரரின் தலையிலும் வைத்து மிரட்டியபடி, வெளியே காத்திருந்த தங்களின் கூட்டாளிகளை உள்ளே வருமாறு சத்தமிட்டுள்ளனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் துப் பாக்கி மற்றும் கையெறி குண்டு களுடன் 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சிறைக்குள் நுழைந்தனர். கையெறி குண்டுகளை வீசியபடி, சிறைக்குள் இருக்கும் தீவிர வாதிகளின் பேரைச் சொல்லி வெளியே வருமாறு அழைத் துள்ளனர்.
அடுத்த சில நிமிடங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலை முன்னணி தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹர்மிந்தர் சிங் என்கிற மின்டூ மற்றும் 5 பேருடன் மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறையை விட்டு வெளியேறி அங்கு காத்திருந்த டொயோட்டா பார்ச்சூனர் காரில் சென்றுவிட்டனர்.
எஞ்சிய சிலர் மேலும் 2 வாகனங் களில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அந்த காட்சிகள் வெறும் 10 நிமிடங்களில் அரங்கேறிவிட்டன. காலை உணவு இடைவேளைக்கு சிறைக் கைதிகள் தங்களின் அறையில் இருந்து வெளியே வரும் நேரத்தை கருத்தில்கொண்டு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தகவலறிந்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், மாநிலத் தலைமைச் செயலாளர் சர்வேஷ் கவுஷால் உள்ளிட்ட உயரதிகாரி களின் உயர் மட்டக் கூட்டத்தை நேற்று அவசரமாகக் கூட்டினார். சிறையின் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் இருவரும் உடனடியாக பணியி லிருந்து நீக்கப்பட்டனர். சிறைத் துறை ஏடிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்தார்.
தப்பியோடியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் உச்ச கட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) ஜக்பால் சிங் சாந்து தலைமையில் விசாரணைக் கமிட்டியை மாநில அரசு அமைத்துள்ளது. மேலும் சிறப்பு குழு அமைத்து, சம்பவம் குறித்து விசாரித்து, 3 நாட்களுக்குள் அறிக்கை பெறப்படும் என சுக்பிர் சிங் பாதல் தெரிவித்தார்.
இதற்கிடையே இச்சம்பவம் குறித்து மாநில அரசிடம் இருந்து மத்திய அரசும் அறிக்கை கேட்டுள் ளது. உள்துறை செயலாளரும் தனியே விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார்.
தப்பியோடியவர்கள் யார்?
நாபா சிறையில் இருந்து மின்டூ என்கிற ஹர்மிந்தர் சிங், விக்கி கவுண்தர், குர்பிரீத் சேகான், நிதா தியோல் மற்றும் விக்ரம்ஜீத் உட்பட 6 பேர் தப்பியோடியுள்ளனர். இதில் மின்டூ மீது, தீவிரவாத தாக்குதல் தொடர்பான 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
பாகிஸ்தான் மீது பஞ்சாப் அரசு புகார்
பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல், ட்விட்டர் வலைதளத்தில், “நாபா சிறைச்சாலை தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு, வேண்டுமென்றே இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஏவிவிட்டு, பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நாபா சிறை தாக்குதல் பின்னணியில் உள்ள தீவிரவாத சதித் திட்டத்தை அம்பலப்படுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.