பாட்னா: "தன் வாழ்நாளில் இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன்" என்று பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக நாட்டில் மோதலை உருவாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
பிஹார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ரூ.75 கோடியில் கட்டப்பட்டுள்ள பொறியியல் கல்லூரியை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்," பாஜகவினர் தொடர்ந்து அபத்தமாக பேசி வருகின்றனர். நான் முன்பு மகாஹத்பந்தன் கூட்டணியிலிருந்து வெளியேறி தேசிய ஜனநாயக கூட்டணியில் (2017-ல்) இணைந்தேன். இப்போது மீண்டும் பழைய கூட்டணிக்கு திரும்பிவிட்டேன். எங்ளுக்குள் விரக்தி ஏற்பட்டு மோதல் உருவாக வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதற்காக பாஜகவினர் என்னை அதிகம் தாக்கிப் பேசி வருகிறார்கள்.
பாஜகவினர் நாட்டில் மோதலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அதனால் நாட்டின் வளச்சிக்கு எந்தப்பயனும் இல்லை. என் வாழ்நாளில் இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். சமாஜ்வாதிகளுடன் (சோஷலிட்ஸ்களுன்) இணைந்து, பிஹார் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பணியாற்றப்போகிறேன்.
கடந்த 1998ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமரான போது மத்திய அமைச்சரவைக்கு என்னையும் தேர்ந்தெடுத்து எனக்கு மூன்று அமைச்சரவையைக் கொடுத்தார் என்பதை பாஜகவினர் மறந்துவிட்டனர். லால் கிருஷ்ணன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்தனர். தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை" என்று நிதிஷ் குமார் பேசினார்.
அமித் ஷாவின் தாக்குதல்
கடந்த வாரத்தில் ஜெய்பிரகாஷ் நாராயணனின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த கிராமத்தில் நடந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் நிதிஷ் குமாரை மறைமுகமாக தாக்கினார். அப்போது பேசிய அமித் ஷா, "ஜேபி நாராயணனின் புகழைப் பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் வளர்ச்சி அடைந்தவர்கள் இன்று பதவிக்காக காங்கிரஸின் மடியில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
முன்னதாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஆகஸ்ட் மாதம் அதிலிருந்கு வெளியேறி, ராஸ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுன் மகாஹத்பந்தன் கூட்டணியில் இணைந்து பிஹார் முதல்வராக 8வது முறை பதவி ஏற்றுக்கொண்டார்.