‘மைசூரு புலி’ என அழைக் கப்படும் திப்பு சுல்தான் கி.பி.1782 1799 காலக்கட்டத்தில் மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்தார். வீரத்திலும் விவேகத்திலும் திப்பு சுல்தான் சிறந்து விளங்கியதால் மைசூரு மாகாணத்தின் எல்லை குடகு, கேரளா வரை விரிந்தது. அவரை நினைவுக்கூரும் வகை யில், அவரின் பிறந்த நாளான நவம்பர் 10-ம் தேதியன்று, ''திப்பு ஜெயந்தி'' விழா கடந்தாண்டு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதைக் கண்டித்து அப்போது பாஜக சார்பில் குடகில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் வன்முறை வெடித்து இருவர் உயிரிழந்தனர். இந்த ஆண்டும், வரும் 10-ம் தேதி திப்பு ஜெயந்தி விழாவைக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.இதற்கு பாஜக, விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறும்போது, ‘‘கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு சார்பாக கொண்டாடுகிறது. இந்துக்களுக்கும், கிறிஸ்துவர் களுக்கும் எதிராக செயல்பட்ட திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதை ஏற்க முடியாது. எனவே கர்நாடக அரசைக் கண்டித்து பாஜக சார்பாக வருகிற 8-ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என அறிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளும் விழா வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.