ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளின் எதிர்ப்பு வேட்டையின்போது, தீவிரவாதிகளால் சுடப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ராணுவ மோப்ப நாய் ‘ஜூம்’ உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீநகரின் பதாமி பக் கண்டோமென்டில் உள்ள சினார் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தில் ஜூம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்து, ஸ்ரீநகர் பகுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் கலோ.எம்ரான் முசவி கூறுகையில், "இந்திய ராணுவத்தின் ஆத்மார்த்தமான இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், சினார் போலீஸ் கமாண்டர் லெப்.ஜெனரல் ஏடிஎஸ் ஆவுஜ்லா மற்றும் பிற ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு ஜூமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அனந்தநாகின் டாங்பாவா என்ற கிராமத்தில் நடந்த தீவிரவாதிகள் தடுப்பு வேட்டையில் ஜூம் முக்கிய பங்காற்றியது. தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களைத் தேடி கண்டுபிடித்தது மட்டும் இல்லாமல், அவர்களில் ஒருவரை முடக்கியும் வைத்திருந்தது. குண்டுக் காயம் பட்டிருந்த போதிலும், மறைந்திருந்த இரண்டு தீவிரவாதிகளை அடையாளம் காட்டிய பின் இலக்குக்கு திரும்பி வரும்போது அதிக ரத்தப்போக்கு காரணமாக ஜூம் மயக்கமடைந்தது. ஜூமின் துரிதமான நடவடிக்கையால்தான் ராணுவ குழுவால் தீவிரவாதிகளைச் சுட்டுக்கொல்ல முடிந்தது.
சினார் வீரர்களில் ஒரு மதிப்புமிக்க உறுப்பினராக இந்த ராணுவ நாய் இருந்தது. தனது இரண்டு வயதில் பல தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருந்து செயல்பட்ட ஜூம் தனது துணிச்சலான செல்களால் தனித்து இருந்தது. சினார் காவலர்கள் ஒரு திறமையான வீரரை இழந்து விட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.
சினார் ராணுவ வீரர்கள் பிரிவு ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், ராணுவ அதிகாரிகள் ஜூம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஜூம் உடலக்கு அஞ்சலி செலுத்தும்போது 29-வது ராணுவ நாய் பிரிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது.
முன்னதாக, காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் டாங்பாவா என்ற கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஜூம் வழக்கம்போல் உதவியது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்படுவதற்கு ஜூம் காரணமாக இருந்தது. எனினும் தீவிரவாதிகள் சுட்டதில் அதன் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. பின்னங்காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் ஜூம் சேர்க்கப்பட்டு, அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை 11.45 மணிக்கு ஜூம் உயிரிழந்தது.