வாஷிங்டன்: இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி உள்கட்டமைப்பு முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் அதனை விரும்பும் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயராக இருக்கிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் வியாழக்கிழமை ஜான் ஹாப்ரின்ஸ் ஸ்கூஸ் ஆஃர் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (எஸ்ஏஐஎஸ்) மாணவர்களுடன் உரையாற்றினார். அங்கு கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பு முழுக்க தனித்துவமானது. எங்களின் 5ஜி தொழில்நுட்பம் வேறு எங்கு இருந்தும் இறக்குமதி செய்யப்படவில்லை. அது முழுவதும் எங்களின் சொந்த தயாரிப்பு.
தென்கொரியா, உலகின் பிற பகுதிகளில் இருந்தும் இந்த தொழில்நுட்பம் இனி வரலாம். நாங்களும் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பத்தை அதனை விரும்பும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடியால் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகள் குறித்து நிச்சயம் நாம் பெருமைப்பட முடியும்" இவ்வாறு அவர் பேசினார்.