ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராணுவத்தின் மோப்ப நாய் ஜூம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவத்தால் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட ‘ஜூம்’ என்ற நாய் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. தெற்கு காஷ்மீரில் பல்வேறு ராணுவ நடவடிக்கையில் இந்த நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அனந்தநாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் டாங்பாவா என்ற கிராமத்தில் கடந்த திங்கட்கிழமைதீவிரவாதிகளுக்கு எதிரானநடவடிக்கையில் ஜூம் வழக்கம்போல் உதவியது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்படுவதற்கு ஜூம் காரணமாக இருந்தது. எனினும் தீவிரவாதிகள் சுட்டதில் அதன்முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. பின்னங்காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் ஜூம் சேர்க்கப்பட்டு, அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. “ஜூம் இன்னும் அபாய கட்டத்தை கடக்கவில்லை. அதன் உடல்நிலையை கண்காணித்து வருகிறோம்” என ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜூம் நேற்று உயிரிழந்தது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறும்போது, “வியாழக்கிழமை காலை 11.45 மணி வரை சிகிச்சையில் முன்னேற்றம் இருந்தது. பிறகு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜூம் உயிரிழந்தது” என்றனர்.