‘‘மதரீதியான அமைப்புகள், அறக்கட்டளைகள் மூலம் கறுப்புப் பணம் மாற்றப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அவினாஷ் மணி திரிபாதி. இவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவினாஷ் கூறியிருப்பதாவது:
நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், மதரீதியான அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் கறுப்புப் பணத்தை அன்பளிப்பாக செலுத்தி வெள்ளையாக்கும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. பல மத அமைப்புகள், அறக்கட்டளைகளை அரசியல்வாதிகள்தான் நடத்தி வருகின்றனர். எனவே, இந்த அமைப்புகள் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. மத அமைப்புகள், அறக்கட்டளைகளுக்கு அன்பளிப்பு என்ற பெயரில் கறுப்புப் பணம் சென்றால் அது அவர்களுடைய வருவாயாக மாறிவிடும். அந்தப் பணத்துக்கு வரியும் கிடையாது. இப்படி கறுப்புப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டால், அரசின் முயற்சி தோல்வி அடைந்து விடும்.
நாட்டில் உள்ள மத அமைப்புகள், அறக்கட்டளைகளை பெரும்பாலும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் மாநில கட்சியை சேர்ந்தவர்கள்தான் நடத்தி வருகின்றனர். எனவே, கடந்த 8-ம் தேதிக்குப் பிறகு மத அமைப்புகளும் அறக்கட்டளைகளும் வங்கிகளில் டெபாசிட் செய்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கான மதிப்பு வரவு வைக்கப்பட மாட்டாது புதிய நோட்டுகளை பெறவும் முடியாது என்று மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் அறிவிக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த உயர் மட்ட கமிட்டி அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் வழக்கறிஞர் அவினாஷ் கூறியுள்ளார்.
பாஜக எம்.பி.க்கள், உத்தரப் பிரதேச அமைச்சர், காங்கிரஸை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் உட்பட முக்கிய பிரமுகர்கள் நடத்தி வரும் அறக்கட்டளைகளின் பெயர்களையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.