இந்திய ஒற்றுமை யாத்திரையில் புஷ்-அப் போட்டியில் ஈடுப்பட்ட டிகே சிவக்குமார், உள்ளூர் சிறுவன், ராகுல் காந்தி, வேணுகோபால் 
இந்தியா

இந்திய ஒற்றுமை யாத்திரை | ராகுல் vs உள்ளூர் சிறுவன்: வைரலாகும் புஷ்-அப் போட்டி

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பொதுச் செயலாளர் வேணுகோபால், உள்ளூர் சிறுவன் ஒருவனுடன் ராகுல் காந்தி நடத்திய புஷ்-அப்ஸ் போட்டி வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை கேரளா வழியாக தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் மாநிலமான கார்நாடகாவில் நடக்கும் யாத்திரையில் தன்னுடன் வருபவர்களை கலகலப்பாக்க ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

விஜயதசமி விடுமுறை முடிந்து தொடங்கிய யாத்திரையின்போது அதில் கலந்துகொண்ட சோனியா காந்தியின் ஷூ லேசை ராகுல் காந்தி கட்டி விட்டது, பின்னர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, டிகே சிவக்குமாருடன் ஓட்டப் பந்தயம் நடந்தது போன்றவை வைரலானது. அதேபோல் செவ்வாய்க்கிழமை நடந்த யாத்திரையின்போது சிறுவன் ஒருவனுடன் ராகுல் நடத்திய போட்டி வைராலகி வருகிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கைகோத்தபடி நடந்து வரும் சிறுவன் ஒருவன் தன்னுடைய 'ஆர்ம்ஸ்' பவரை ராகுலுக்கு காட்ட, அவரும் அந்தச் சிறுவனை புஷ்-அப்ஸ் போட்டிக்கு அழைக்கிறார். இந்தப் போட்டியில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், வேணுகோபால் இருவரும் கலந்து கொள்கின்றனர். போட்டியிலிருந்து டி.கே.சிவக்குமார் முதலில் வெளியேறுகிறார். வேணுகோபால் இறுதி வரை போட்டியில் இருக்கிறார். போட்டியின் முடிவில் ராகுல் காந்தி மகிழ்ச்சியாக சிறுவனுக்கு கைகொடுத்து தலையைத் தடவுகிறார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், போட்டியாளர்கள் நான்கு பேரில் ராகுல் காந்தி மட்டுமே சரியாகச் செய்தார் மற்றவர்கள் பாதி புஷ்-அப்ஸ் மட்டுமே எடுத்ததாக தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியின் புஷ்-அப்ஸ் போட்டி வைரலாவது இது இரண்டாவது முறை. முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தின் கல்லூரி மாணவர் ஒருவர் அழைக்க, ராகுல் காந்தி அவருடன் போட்டியிட்டது நினைவுகூரத்தக்கது.


ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிசிஆர் National Commission for Protection of Child Rights (NCPCR)கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT