திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாளான நேற்று காலை கற்பகவிருட்ச வாகனத்தில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான நேற்று காலையில் உற்சவ மூர்த்திக்கு ‘ராஜ மன்னார்’ அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மேள தாளங்களுடன் வாகன மண்டபத்தில் உள்ள கற்பகவிருட்ச வாகனத்தில் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வாகன சேவை நடைபெற்றது.
இதில் 4 மாட வீதிகளிலும் காத்திருந்த திரளான பக்தர்கள் தாயாருக்கு ஆரத்தி எடுத்து வழி பட்டனர். அப்போது நடந்த வெளி மாநில நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பின்னர் மாலை சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இரவு ஹனுமன் வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.