மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 8வது ஆண்டாக நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மும்பையிலுள்ள ஜிம்கானா போலீஸ் நினைவிடத்தில் மலரஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதில் மகாராஷ்டிர ஆளுநர் சி.வி. ராவ், முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, மூத்த போலீஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த மலரஞ்சலி நிகழ்வில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
மும்பை 26/11 தீவிரவாதத் தாக்குதல்
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குள் கடல் வழியாக ஊடுருவிய 10 தீவிரவாதிகள் காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே ஓட்டல், சத்ரபதி சிவாஜி முனையம், யூத சமூகக் கூடம், ஓபராய் டிரிடென்ட் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில், 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதில், மும்பை தீவிரவாதத் தடுப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே, ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை காவல் துறை கூடுதல் ஆணையர் அசோக் காம்தே, முதுநிலை ஆய்வாளர் விஜய் சலஸ்கர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், 28 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.