இந்தியா

என்டிடிவி இந்தியா ஒளிபரப்பு தடை: எதிர்ப்புகளும், கேள்விகளும்

பிடிஐ

'என்டிடிவி இந்தியா' செய்தி தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட உள்ளதாகக் தெரிவிக்கப்பட்டதற்குப் பல்வேறு கட்சிகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். செய்தி ஆசிரியர்கள் சங்கமும் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் தீவிரவாத தாக்குதல் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பிய போது, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ விவரங்களையும், ரகசியம் காக்கப்பட வேண்டிய முக்கிய தகவல்களையும் பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக்காட்டியதாக 'என்டிடிவி இந்தியா' சேனல் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனை உறுதி செய்த மத்திய அமைச்சர்கள் குழு, நவம்பர் 9-ம் தேதி அன்று, அந்த தொலைக்காட்சிச் சேனலில் நிகழ்ச்சிகள் எதையும் ஒளிபரப்பாமல் நிறுத்திவைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

இப்பரிந்துரையை ஏற்று, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தொலைக் காட்சி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பல்வேறு கட்சிகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

'என்டிடிவி இந்தியா' தடை பத்திரிகை சுதந்திர மீறல்: இந்திய செய்தி ஆசிரியர்கள் சங்கம்

'என்டிடிவி இந்தியா' செய்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதித்திருப்பது பத்திரிகை சுதந்திரத்தையே நேரடியாக மீறுவதாகும் என்று இந்திய செய்தி ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.

மேலும், இந்தத் தடை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மோடிக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்: கேஜ்ரிவால்

இதற்கு ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கட்சித்தலைவரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''அனைத்து ஊடகங்களும் என்டிடிவியுடன் இணைந்து 9-ம் தேதி ஒளிபரப்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மோடியின் சர்வாதிகாரத்தை தைரியத்துடன் எதிர்த்த செய்தி ஆசிரியர்கள் சங்கத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய ஒமர் அப்துல்லா

சேனல் தடை குறித்துத் தன் ட்விட்டரில் பதிவிட்ட ஒமர், ''செய்தி ஊடகமான 'என்டிடிவி இந்தியா' ஒளிபரப்பு ஒரு நாள் தடைசெய்யப்பட உள்ளது.

இறந்த வீரரின் குடும்பத்தைப் பார்க்கச் சென்றதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதுதான் நீங்கள் (மோடி) சொன்ன நல்ல நாட்களா?'' என்று கேட்டுள்ளார்.

அரசின் நடவடிக்கை அச்சுறத்தலாக உள்ளது: காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் திக்விஜய் சிங், ''நவம்பர் 9-ம் தேதி அன்று அனைத்து செய்தி மற்றும் அச்சு ஊடகங்களும் என்டிடிவியுடன் இணைந்து ஒளிபரப்பு மற்றும் அச்சிடல் செய்யாமல் அவர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

'என்டிடிவி இந்தியா' தடை, அதிர்ச்சியளிப்பதாகவும், முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாகவும் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ''மோடி கூறிய நல்லாட்சியின் தொடக்கம் இதுதான். குஜராத் மாதிரி ஆட்சி இப்போதுதான் தொடங்கியுள்ளது. முதலில் விவசாயிகளும், பின்னர் தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது ஊடகங்கள்'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகத்தைத் தடை செய்வது நெருக்கடி நிலையைப் போல் உள்ளது: மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ''செய்தி சேனலான 'என்டிடிவி இந்தியா' தடை, அதிர்ச்சியளிக்கிறது. அரசுக்கு பதான்கோட் தீவிரவாத தாக்குதல் செய்தி ஒளிபரப்பில் பிரச்சனைகள் இருந்தால், அதைச் சரிசெய்ய வேறு வழிகள் இருக்கின்றன. தடை செய்வது என்பது நெருக்கடி நிலையை அமல்படுத்துவது போன்ற மனநிலையாகும்'' என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT