மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு ராகுல் காந்தி தலைமை தாங்குவார். ஆனால் அவர் பிரதமர் வேட்பாளர் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிப்பதில்லை என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர்கள், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
அவர்களை அமைதிப்படுத்திய கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி தலைமையேற்று வழிநடத்துவார்.ஆனால் அவர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார். இந்த முடிவில் மாற்ற மில்லை என்று உறுதியாகக் கூறினார்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: இப்போது ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாளைக் கொண்டாடு கிறோம். இந்த நேரத்தில் அவரது சிந்தனைகளை நினைவுகூர்கிறேன். ஆபத்தை எதிர்கொள்வதும் அதனால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை சமாளிப்பதும்தான் காங்கிரஸின் பயணப் பாதை என்று நேரு அடிக்கடி கூறுவார். இதை நம் மனதில் நிறுத்த வேண்டும்.
அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதைக் கண்டு துவண்டுவிடக்கூடாது. அரசியலில் வெற்றி, தோல்வி தவிர்க்க முடியாதது. கடந்த காலங்களில் காங்கிரஸ் பல்வேறு கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்திருக்கிறது. எதற்குமே நாம் அஞ்சியது இல்லை. இப்போதைய தோல்வியில் இருந்தும் காங்கிரஸ் மீண்டெழும்.
அனைத்து மதங்களையும் அரவணைப்போம்
அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்லும் மதச்சார்பின்மை தத்துவத்தை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. தேர்தல் காரணமாக இந்த கொள்கையை நாம் உயர்த்திப் பிடிக்கவில்லை. இது காங்கிரஸின் உள்ளார்ந்த அடிப்படைக் கொள்கை. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால் சட்டம் உள்பட ஊழலுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை இயற்றி மத்திய அரசு புதிய வரலாறு படைத்துள்ளது.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சில குறைகள் நேர்ந்திருக்கலாம். எனினும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதை மக்கள் நினைவில் கொள்வார்கள் என்று நம்புகிறேன். பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 10 ஆண்டு காலம் கூட்டணி ஆட்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தி உள்ளார். பல்வேறு ஏற்றத் தாழ்வுகளிலும் அவர் திறம்பட செயல்பட்டார்.
மதவாதத்தால் அச்சுறுத்தல்
நாட்டின் பிரதான எதிர்க்கட்சி யின் கொள்கை மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒற்றுமை என்ற போர்வையில் அவர்கள் மக்களைப் பிளவுபடுத்தி வருகிறார்கள்.
வரும் மக்களவைத் தேர்தல் மதச்சார்பின்மை மற்றும் மதவாத கொள்கைகளுக்கு இடையே நடைபெறும் மாபெரும் யுத்தமாக அமையும். மக்களை ஒன்றுபடுத்த முயற்சிக்கும் சக்திக்கும் பிளவுபடுத்த நினைக்கும் சக்திக்கும் இடையே யுத்தம் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட அனைத்து சக்திகளும் காங்கிரஸோடு கைகோக்க வேண்டும். மதச்சார் பின்மை, அனைத்து சமூகத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படையான நிர்வாகம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்பகமான ஆட்சி ஆகியவற்றை முன்னிறுத்தி தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும் என்று சோனியா தெரிவித்தார்.