காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி | கமல்ஹாசன் 
இந்தியா

“சனாதன தர்மத்தை பல நாடுகளுக்குப் பரப்பியவர்கள் சோழர்கள்” - கமலுக்கு காங். எம்.பி பதில்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: “சனாதன தர்மத்தை பல நாடுகளுக்குப் பரப்பியவர்கள் சோழர்கள்” என்று நடிகரும் மநீம கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி பதில் அளித்துள்ளார்.

தமிழர்களின் அடையாளம் பறிக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய இயக்குநர் வெற்றி மாறன், “ராஜ ராஜ சோழன் இந்து அல்ல” என கூறினார். ராஜ ராஜ சோழன் இந்து அல்ல என ஒரு தரப்பும், அவர் இந்துதான் என்று மற்றொரு தரப்பும் வாதிட்டு வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், வெற்றி மாறனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்ற வார்த்தையே கிடையாது என்றும், சைவம், வைணவம் என்றுதான் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ராஜ ராஜ சோழன் இந்து அல்ல என்ற கருத்துக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிவனுக்கு கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் இந்து இல்லையா என்றும், அவர் என்ன தேவாலயத்தையும் மசூதியையுமா கட்டினார் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். ராஜ ராஜ சோழன் தீவிர சிவ பக்தர் என்றும், தன்னை சிவபாத சேகரன் என அழைத்துக்கொண்டவர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கமலின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “சைவமும் வைணவமும் இந்து மதத்தின் அடையாளங்கள்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசனுக்கு பதில் அளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அபிஷேக் மனு சிங்வி, “ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்ற வார்த்தை வேண்டுமானால் இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால், சனாதன தர்மம்தான் ஆதித் தமிழர்களின் அடித்தளம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “சோழர்கள் சிவனையும், விஷ்ணுவையும், துர்கையையும் வழிபட்டவர்கள். சனாதன தர்மத்தை பல நாடுகளுக்கு பரப்பியவர்கள் அவர்கள். கடவுள் மறுப்பு, தமிழ்நாட்டின் அடிப்படை அல்ல” என்று அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT