இந்தியா

எலிகளைப் பிடிக்க ஆண்டுக்கு ரூ 20 லட்சம் செலவு! -பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம்

இரா.வினோத்

பெங்களூர் மாநகராட்சியில் 2013-ம் ஆண்டு எலிகளைப் பிடித்ததற்காக ரூ 20 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றில், 3 மாதங்களில் 20 எலிகளைப் பிடித்ததற்கு ரூ 2 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கிளை அலுவலகக் கட்டிடம் உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒருங்கிணைந்த புதிய அலுவலகம் சாந்தி நகரில் கட்டப்பட்டுள்ளதால், இந்த கட்டிடம் கடந்த 2 ஆண்டு களாக காலியாக இருக்கிறது.

இதையடுத்து பெங்களூர் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் போலியோ, தடுப்பூசி உள்ளிட்ட‌ சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு இந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் எலிகளின் தொல்லை அதிக அளவில் இருந்தது.

தடுப்பூசி போடுவதற்காக வரும் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துகளை யும் எலிகள் சேதப்படுத்தின.

இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள எலிகளைப் பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

1 எலி பிடிக்க ரூ.10 ஆயிரம்

இந்நிலையில், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள், அந்த கட்டிடத்தில் இதுவரை எத்தனை எலிகளைப் பிடித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மல்லேஸ்வரம் பகுதியின் கவுன்சிலர் என்.ஆர்.ரமேஷ் மனு அளித்தார்.

அது தொடர்பாக புதன்கிழமை அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், எலிகளைப் பிடித்ததில் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் ஊழல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக என்.ஆர்.ரமேஷ் 'தி இந்து' செய்தியாளரிடம் கூறும்போது, ''பெங்களூர் மாநகராட்சியில் 2013-ம் ஆண்டு எலி பிடித்ததில் ஊழல் நடந்ததாக சில அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைக் கோரினேன்.

அதில், 2013-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மல்லேஸ்வரத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய கிளை அலுவலகத்தில் 20 எலிகளைப் பிடிப்பதற்கு ரூ. 2 லட்சம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு எலியைப் பிடிக்க ரூ.10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டில் பெங்களூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளி லும் எலிகளைப் பிடிப்பதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என பார்த்தால், ரூ.20 லட்சம் செலவானதாக தெரிய வந்தது. 1 பெருச்சாளியை பிடிக்க ரூ. 10 ஆயிரமும், சிறிய ரக எலியை பிடிக்க ரூ. 5 ஆயிரமும் செலவிட்டதாக மாநகராட்சி கணக்குக் காட்டியுள்ளது. இதில் ஊழல் நடந்திருக்கிறது.

ரூ 1.4 கோடி ஊழல்?

அதே போல பெங்களூர் மாநகராட்சி கட்டிடத்தின் உள்புறத்தைப் புதுப்பிப்பதற்கு மட்டும் ரூ. 1.4 கோடி செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்துள்ளது.

பெங்களூர் மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல்களை விசாரிக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் என்.ஆர்.ரமேஷ்.

SCROLL FOR NEXT